Just relax

Just relax
Just Relax__keep deep breath..

Best Posts

எளிதில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்

 

# படித்து சிந்திக்க #

ஒரு ஊரில் தர்மன் என்ற ஒரு தொழில் அதிபர் இருந்தார்.
அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் ஒரு நாள் தன்
தந்தையிடம் எளிதில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்
என்று கேட்டான்.

அதற்கு தர்மன், தன் வீட்டை ஒட்டியிருந்த தோட்டத்திற்கு தன்
மகனை அழைத்துச் சென்றார்.

தோட்டத்திற்கு சென்று அங்கு மூடி வைத்திருந்த ஒரு கூடையை
அப்படியே தூக்கினார். அதுவரை அதன் உள்ளே அடைபட்டிருந்த
கோழிகள் அனைத்தும் சுதந்திரம் கிடைத்ததென்று நினைத்து
தோட்டத்திற்குள் தலைதெறிக்க ஓடின.

உடனே தர்மன், தன் மகனிடம், நீ விரைந்து சென்று அந்தக்
கோழிகளைப் பிடித்து வரும்படி கூறினார். அவனும் அந்தக்
கோழிகளை விரட்டிக்கொண்டு கோழிகளின் பின்னாலேயே
ஓடினான்.

அடைபட்டுக் கிடந்த கோழிகள் தோட்டத்தில் நான்கு திசைகளிலும்
மாறி மாறி ஓடிக் கொண்டு இருந்தன. கோழிகள் அனைத்தும்
ஒவ்வொரு திசையில் இருந்ததால் தர்மனின் மகனுக்கு எந்தக்
கோழியைப் பிடிப்பது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடி,
இறுதியில் களைப்படைந்து எதையும் பிடிக்காமல் சோர்ந்து போய்
வந்தான்.

தன் தந்தையிடம் என்னால் எந்த கோழியையும் பிடிக்க
முடியவில்லை என்று சோகமாகச் சொன்னான்.

தர்மன் சிரித்துக் கொண்டே, மகனே! அதோ அந்த சிவப்பு நிறக்
கோழியை மட்டும் துரத்திச் சென்று முதலில் பிடித்து வா. பிறகு மற்ற
கோழிகளைப் பிடித்துக் கொள்ளலாம் என்று கூறினார். அவனும் தன்
தந்தைக் கூறியது போலவே, அந்த சிவப்பு நிறக் கோழியை மட்டும்
குறிவைத்து துரத்திச் சென்றான்.

சில நிமிடங்களிலேயே அந்த சிவப்பு நிறக் கோழி அங்கும் இங்கும்
ஓடி ஓடி களைப்படைந்து ஒரு இடத்தில் நின்றது. உடனே அவன் அந்த
சிவப்பு நிறக் கோழியைப் பிடித்து கொண்டான்.

சிவப்பு நிறக் கோழியை பிடித்து வந்த தன் மகனைப் பார்த்து, தர்மன்
நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு இங்கே விடை கிடைத்து விட்டது என்றார்.
அவருடைய மகனுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்பா, நான் எளிதில்
வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன்.
அதற்கும் இந்த கோழியைப் பிடித்து வந்ததற்கும் என்ன சம்மந்தம்
என்று சற்று விளக்கமாக கூறுங்கள் என்று கேட்டான்.

உடனே தர்மன், நீ ஒரு சிவப்புநிறக் கோழியை மட்டும் குறி வைத்து
துரத்திச் சென்றதால் நீ மிக எளிதாக அந்த சிவப்பு நிறக் கோழியைப்
பிடித்து வந்து விட்டாய் அல்லவா, அதேபோல் தான் ஏதேனும் ஒரு இலக்கை
தீர்மானித்துக் கொண்டு அந்த இலக்கை அடைவதையே முக்கிய
குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால் எளிதில் வெற்றி பெறலாம்
என்றார்.

நீதி :
எளிதில் வெற்றி பெற, ஒரு இலக்கை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு
செயல்பட வேண்டும்…

நன்றி- முகநூல் (லட்சம் கதைகள்)

No comments