Just relax

Just relax
Just Relax__keep deep breath..

தன்னம்பிக்கை கதைகள்

தன்னம்பிக்கை கதைகள்

வறுமை
------------

சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒருமகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.

அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார் -

ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது. அதைப் பார்த்த ஒரு மனிதன், ""மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்று கேட்டான்.

அதற்கு அந்தப் பறவை, ""மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்...'' என்றது.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.

தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து, ""மனிதனே, நீயும் தேடு... மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது.

கதையைச் சொல்லி முடித்த மகான், ""நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும்'' என்றார்.
காது கேட்காத தவளை

மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்கு தயாராகின.

அவை மலையேற ஆரம்பிக்கும் போது பார்வையாளராக இருந்த ஒருவர் "இவளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடக்கி விழுந்தால் அவ்வளவுதான்" என்றார்.

உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்தி விட்டது.

சிறுது தூரம் சென்றவுடன் இன்னொருவர் "மேலே செல்லும்போது பாம்புகள் பிடித்து விட்டால் என்ன செய்யப் போகின்றன " என்றார்.

உடனே இரண்டாவது தவளையும் கீழிறங்கிவிட்டது.

ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாவது தவளை மட்டும் மலை உச்சியை சென்றடைந்தது.

பின்னர் கீழிறங்கிய அந்தத் தவளையிடம் அங்கிருந்த ஒருவர் "உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடைய முடிந்தது" என்று கேட்டார்.

அதற்கு அந்தத் தவளை "எனக்குக் காது கேட்காது " என்றது.

நாமும் வாழ்வில் இந்த தவளையை போல இருந்தால் தான் சில நேரங்களில் முன்னேற முடியும்.

- நன்றி தமிழால் இணைவோம்
ஒரு தத்துவஞானி ஆற்றைக் கடப்பதற்காகப் படகில் ஏறினார். படகுக்காரனைப் பார்த்து, ”உனக்குப் பூகோளம் தெரீயுமா?” என்று கேட்டார். “எனக்குப் படகு ஓட்டத்தான் தெரியும், பூகோளம் எல்லாம் தெரியாது” என்றான் படகுக்காரன். வாழ்க்கை ஒரு ரூபாய் என்றால், அதில் கால் ரூபாயை நீ இழந்துவிட்டதாக அர்த்தம் என்றார் தத்துவஞானி. சற்றுத் தூரம் போனவுடன், “சரித்திரம் தெரியுமா” என்று கேட்டார். ” அதுவும் எனக்குத் தெரியாது” என்றான் படகுக்காரன். “அரை ரூபாயை இழந்துவிட்டாய்” என்றார் அவர். பிறகு அவனைப் பார்த்து, “விஞ்ஞானம் தெரியுமா?” எனக் கேட்டார். “அதெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது அய்யா, எனக்கு படகு ஓட்ட மட்டும் தான் தெரியும்” என்றான் படகுக்காரன். “முக்கால் ரூபாயை இழந்துவிட்டாய்” என்றார் அவர். அப்பொழுது திடீரென்று ஆற்றில் சுழல் ஏற்பட்டு படகு கவிழும் நிலை ஏற்பட்டது.. “சாமி, உங்களுக்கு நீந்தத் தெரியுமா?” என்று படகுக்காரன் கேட்டான். “தெரியாது” என்றார் அந்த தத்துவ ஞானி. “இப்பொழுது உங்கள் உயிரை அல்லவா நீங்கள், இழக்கப் போகிறீர்கள்”, எனக் கூறிய படகுக்காரன் நீரில் குதித்துக் கரை சேர்ந்தான். தத்துவஞானியோ நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிர் துறந்தார்.. நீதி> தத்துவம் உயிரைக் காப்பாத்தாது…!!
--இணையத்திலிருந்து
 

தன்னம்பிக்கை கதைகள்-4

பயம்! பயம்! பயம்!
--------------------------
ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புன்னியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானி முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார். என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார். சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி. ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும்.

எவ்வளவு வெயிட்?
-----------------------------
வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார்.

மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”

வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”

“ஒண்ணுமே ஆகாது சார்”

”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”

“உங்க கை வலிக்கும் சார்”

“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”

“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”

“இல்லை சார். அது வந்து…”

“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”

“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”

”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”

# இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.
காபி கோப்பை
==============
ஒருவர் தனது நண்பர்களுக்கு விருந்து அளித்தார்.விருந்தின் முடிவில் ஒரு கேன் நிறைய காபி கொண்டு வந்து வைக்கப்பட்டது.ஒரு தட்டில் சாதாரண பிளாஸ்டிக் கப்பிலிருந்து கண்ணாடிக் கோப்பை,பீங்கான் கோப்பை, அலங்காரக் கோப்பை என்று விதவிதமான கோப்பைகள் இருந்தன.விருந்துக்கு வந்த அனைவரும் விலை உயர்ந்த கோப்பைகளை எடுக்கவே முயன்றனர்.விலை குறைந்த பிளாஸ்டிக் கோப்பைகளை யாரும் சீண்டக் கூட இல்லை.விருந்தளித்தவர் சொன்னார்''எதிலும் சிறப்பையே நாடுவது மனித இயல்பே.ஆனால் உங்களது இப்போதைய தேவை காபிக் கோப்பைகள் அல்ல.நல்ல காபிதான்.எந்தக் கோப்பையில் குடித்தாலும் நீங்கள் குடிக்கப் போவது இங்குள்ள ஒரே தரக் காப்பியைத்தான்.
நம் வாழ்க்கையும் அந்தக் காபியைப் போன்றுதான் உள்ளது.அந்தக் காபியை அருந்த உதவும் கோப்பைதான் உங்கள் வேலை,சமூக அந்தஸ்து,செல்வச் செழிப்பு எல்லாம்.நீங்கள் உங்கள் கோப்பைகளில் மட்டும் கவனம் செலுத்தி.காபியின் உண்மையான ருசியை ரசிக்கத் தவறி விடுகிறீர்கள். காபியின் ருசியை நாவிற்கும் நாசிக்கும் ஏற்றுங்கள்,நண்பர்களே!''

பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள்
===========================
தவறிழைத்த அரசனொருவனைச் சினங்கொண்ட முனிவர் ஒருவர்,''நீ நாளையே பன்றியாகிச் 
சாக்கடையருகே திரியக்கடவாய்'' என்று சபித்துவிட்டார். பன்றியாக மாறிவிடும் கேவலத்தை விரும்பாத அரசன் தன் மகனை அழைத்து, ''நான், நாளை பன்றியாக மாறிய மறுகணமே என்னை வாளால் வெட்டிக்கொன்றுவிடு!'' என்று கேட்டுக்கொண்டான். 

எதிர்பார்த்தபடி மறுநாள் காலை அரசன் பன்றியானான். மகன் சோகத்துடன் பன்றியான தன் தந்தையை வெட்ட வாளை வீசும்போது,'' மகனே! பொறு! இன்னும் ஒருமாதம் பன்றிவாழ்க்கை எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சாகிறேன். அடுத்த மாதம் இதே நாளில் என்னைக்கொன்று விடு'' என்றான்.

பன்றி வாழ்க்கையில் அவன் ஒரு பெண் துணையைத்தேடிக்கொண்டான். பெண் பன்றி கர்ப்பமானது. ஒருமாதம் கழித்து மகன் மீண்டும் தந்தையைக் கொல்ல வாளுடன் வந்தபோது,'' மகனே இப்போது நான் இறந்தால் கர்ப்பமாகியுள்ள என் மனைவி ஆதரவற்றுவிடுவாள். குட்டிகள் பிறந்த பின் அடுத்த மாதம் இதே நாளில் என்னைக் கொன்றுபோடு'' என்றான்.

மீண்டும் ஒருமாதம் கழித்து, மகன் தந்தை தனக்கிட்ட கட்டளைப்படி தந்தையையின் அருவருப்பான வாழ்வை முடிவு கட்ட வந்தபோது,'' மகனே இந்தக் கேவலமான வாழ்க்கை எனக்கு இப்போது பழகிவிட்டது. சாக்கடை ஓரத்தில் சமாளித்து வாழவும் பழகிவிட்டேன். மனைவி, குட்டிகள் என்று பந்தமும் பொறுப்பும் எனக்கு இந்த வாழ்வையும் அர்த்தமுள்ளதாக்கிவிட்டது. இனி இப்படியே இருந்துவிடுகிறேன். என்னை இனி இப்படியே வாழவிடு. எந்தத் துன்பம் வந்தாலும் பழகிக்கொண்டு நீயும் வாழக்கற்றுக்கொண்டால், உன் வாழ்வும் மகிழ்வாக இருக்கும் '' என்று மகனுக்கு அறிவுறுத்தினான்.

நமக்கு வரும் பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள் இருக்கின்றன.

முதல் வழி பிரச்சினைகளைத் தீர்க்க வழி தேடுவது.

அடுத்தது,பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டுச் செல்வது.

இறுதிவழி பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது. பல நேரங்களில் இந்த இறுதிவழிக்கே நாம் தள்ளப்படுகிறோம். பன்றியான அரசன் மாதிரி பிரச்சினையோடு வாழ்வதே தீர்வாகிறது.


பிரச்சினைகளோடு மோதிப்பார்த்துத் தீர்வு காணும் முதல் வழிதான் சிறந்தது என்பதில் ஐயமில்லை. எனினும் எல்லாப் பிரச்சினைகளிலும் அது நடைமுறையில் சாத்தியமாக இருப்பதில்லையே! மூப்பு, பிணி,சாவு, சூழல் முதலியவற்றைத் தடுப்பது இன்றுவரை முற்றிலும் சாத்தியமாகவில்லையே!

பிறவியிலோ, விபத்திலோ உறுப்புகளை இழந்தவர், அன்பான உறவுகளைப் பறிகொடுத்தவர், கடைசிமுறையீடும் தோற்று, தூக்குமேடை ஏறவேண்டியவர், புற்றுநோயின் இறுதிக் கட்டத்தில் வாழ்பவர்- இவர்கள் மட்டுமன்றி, ஏற்றே ஆகவேண்டிய கசப்பான பணியை ஆற்றவேண்டிய சூழலில் உள்ளவர், மனமாறுபாடுடைய மனித உறவுகளுடன் வாழ்தே தீரவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர் - இவர்களெல்லாம் பிரச்சினைகளோடு வாழ்ந்தே தீரவேண்டியவர்கள்..

''உனக்கு ஏழரை நாட்டுச்சனி. ஆனால் ஓராண்டுக்கு மேல் பிரச்சினையில்லை'' என்றான் சோதிடன். பாதிக்கப்பட்டவன் எப்படியெனக்கேட்டதற்கு,'' ஓராண்டில் கஷ்டங்கள் பழகிவிடும். மீதி ஆண்டுகளில் துன்பம் தெரியாது'' என்றானாம். துன்பங்கள் பழகிப்போனால் அதன் வேதனை கரைந்துவிடும் என்பதே உண்மை.

தணிப்பறியாத் துன்பங்களைக் கண்டு அஞ்சிஓடாமல் அதனையே ஏற்று, தம்வசப்படுத்தி வாழ்ந்தவர்கள், அதன் பலனாக மாபெரும் சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள்.

1. 43 வயதில் நிரந்தரமாகக் கண்பார்வையிழந்த ஆங்கிலக்கவி மில்டன் அதன் பிறகே ஆங்கிலத்தின் மிகச்சிறந்த காவியமான இழந்த சொர்க்கத்தை எழுதினார்.

2.விபத்தில் ஒரு காலையே இழந்த இளம்பெண் சுதாசந்திரன் அதன்பிறகே செயற்கைக்காலைப் பொருத்திக்கொண்டு சிறந்த நாட்டியக்கலைஞராகவும், நடிகையாகவும் ஓளிவீசிக்கொண்டிருக்கிறார்.

3.தூக்குமேடை ஏறும் முன்நாளில் கூடப் பதற்றப்படாமல், கடைசியாகத் தனக்குப்பிடித்த குலோப் ஜாமனைச் சுவைத்துவிட்டு, லெனினின் 'அரசும் புரட்சியும்' என்ற நூலைப் படித்துகொண்டு ஒவ்வொரு கணத்தையும் அர்த்தமுள்ளதாக்கியவர் விடுதலை வீரர் பகத் சிங்.

4.கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வசந்தி பரவத்தொடங்கியதை அறிந்து, தம் மனைவியிடம், ''மதுரம்! நான் சாகலேன்னா இவங்க விடமாட்டாங்க போல இருக்கே. இவங்க திருப்திக்காவது ஒருதரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கிறதே''என்று அந்த இறுதிநாள்களிலும் நகைச்சுவையைத் தவழவிட்டார்.

5. பிரிட்டனில் 21 வயது இளைஞர் ஒருவர் , முற்றிலும் அத்தனை உறுப்புகளையும் முடக்கிப்போடும் மோசமான நரம்புநோயால் பாதிக்கப்பட்டு பேச்சும், உடல்அசைவும் இழந்தும், கவலைப்படாது, சக்கரநாற்காலியில் இருந்துகொண்டு, மின்னணு கருவியைக்கொண்டே தம் சிந்தனைகளை வெளிப்படுத்தி வருகிறார். அவரே இன்றைய தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானிகளுள் ஒருவரும், ஐன்ஸ்டைனுக்குப்பிறகு மாபெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவரும், அண்மையில் அமெரிக்காவில் மிக உயரிய அறிவியலாளர் விருதைப்பெற்றவருமான ஸ்டிபன் ஹாக்கின்ஸ்.

பிரச்சினை எவ்வளவு பெரிதாயினும் அதனோடு ஐக்கியமாகி கூடவே வாழ்ந்து வசப்படுத்துவதற்கு உரிய துணிவையும், பொறுமையும் வளர்த்துக்கொண்டால் இந்தச் சாதனையாளர்கள் வரிசையில் நாமும் சேரலாம்.
 

1 comment:

  1. அன்புள்ள தளிர் சுரேஷ் அவர்களுக்கு,

    தங்களுடைய வலை பூவில் என் பதிவை சேர்த்துக்கு நன்றி, உங்களுடைய அந்த வலை பூ அருமையாக உள்ளது ,

    மேலும் நான் இப்போது facebook இல் lifeமச்சி என்ற பேஜ் இல் எழுதி கொண்டு இருக்கிறேன்,

    https://www.facebook.com/Life-மச்சீ-857880197605912/

    நன்றி ,
    அன்புடன் சிவப்பிரகாஷ்

    ReplyDelete