புத்தகம் படிப்பது எப்படி?
புத்தகம் படிப்பது எப்படி?
புத்தகம் படிப்பது என்பது எளிமையானதில்லை. அது ஒரு நுட்பமான கலை. என்ன படிப்பது. எப்படி படிப்பது. ஏன் சில புத்தகங்கள் உடனே புரிந்துவிடுகின்றன. சில புரிவதேயில்லை. ஒரே புத்தகம் எப்படி வெவ்வேறு வாசகர்களால் வேறு விதமாகப் படிக்க படுகிறது. சில புத்தகங்கள் ஏன் பல நூறு வருசமாக யாவருக்கும் பிடித்திருக்கிறது. படிப்பதனால் என்ன பயனிருக்கிறது. இப்படி புத்தகங்கள் தொடர்பாக நூறு கேள்விகளுக்கும் மேலாகயிருக்கின்றன.
இந்தக் கேள்விகளை வேறு வேறு வடிவங்களில் உலகின் எல்லா இடங்களிலும் யாரோ யாரிடமோ கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். இதற்கான பதில்களை ஒவ்வொரு எழுத்தாளனும் அவனளவில் தெளிவுபடுத்திக் கொண்டேயிருக்கிறான். ஆனால் கேள்வி அப்படியே இருக்கிறது.
நான் படிக்க துவங்கிய வயதில் இதே கேள்விகளுடன் இருந்தேன். இன்று வாசிக்க துவங்கும் ஒரு இளம்வாசகன் அதே கேள்விகளுடன் என்னிடம் வருகிறான்.
இந்த கேள்விகளுக்கான பதிலாக நான் வாசிக்க சிபாரிசு செய்வது ஒரு கட்டுரையை . அதன் தலைப்பு. How Should One Read a Book?.1926 வது வருடம் இந்த கட்டுரையை வர்ஜினியா வுல்ப் (VirginiaWoolf )எழுதியிருக்கிறார். 83 வருசங்களுக்குப் பிறகும் இக்கட்டுரை தரும் விளக்கம் நெருக்கமாகவே உள்ளது.
வர்ஜீனியாவின் கட்டுரை இந்த பதில்களை ஒரு அறிவுரையாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற எச்சரிக்கையோடு துவங்குகிறது. காரணம் புத்தகம் வாசிப்பதற்கு எவரது அறிவுரையும் வழிகாட்டலும் பயனற்றதே. அது நீச்சல் அடிப்பது எப்படி என்று சொற்பொழிவு ஆற்றுவது போன்றது,
எது நல்ல புத்தகம் என்று நமது வாசிப்பு அனுபவத்தை வேண்டுமானால் பரிந்துரை செய்யலாம். மற்றபடி இப்படிப் படி. இப்படி படித்தால் மட்டுமே புரியும் என்ற அறிவுரைகள் பெரும்பாலும் பொருந்தக்கூடியதில்லை.
ஆகவே வர்ஜீனியா வுல்ப்பின் கட்டுரை எப்படி ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பதைப் பற்றிய தன்னிலை விளக்கம் போலவே உள்ளது. மூன்றே பக்கம் உள்ள சிறிய கட்டுரை. ஆனால் பலமுறை வாசித்து விவாதிக்க வேண்டியது.
வர்ஜீனியாவின் முதல் பரிந்துரை. எந்தப் புத்தகத்தையும் படிப்பதற்கு முன்பும் அதை பற்றிய முன்முடிவுகள் வேண்டாம், திறந்த மனதோடு இருங்கள். எழுத்தாளரை உங்களது எதிரியைப் போல பாவிக்காதீர்கள். எழுத்தின் மீதான உங்கள் தீர்ப்பைச் சொல்வதற்காக படிக்க முயற்சிக்க வேண்டாம். அது உங்களை நீங்களே நீதிபதி ஸ்தானத்தில் உட்கார வைத்துக் கொண்டு புத்தகத்தையும் எழுத்தாளனையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது போன்றது. அதில் நஷ்டமடையப் போவது நீங்களே.
ஒரு புத்தகம் அதிகம் விற்பனையாவதாலோ.அல்லது பிரபலமாக இருப்பதாலோ நல்லபுத்தகமாக இருக்கபோவதில்லை. மாறாக அது நல்ல புத்தகமா இல்லையா என்பதை தீர்மானிக்க போவது நீங்களும் உங்களது திறந்த மனதுமே.அந்த மனது உள்ளுணர்வு சார்ந்தே பெரிதும் செயல்படக்கூடியது. ஆகவே உங்கள் உள்ளுணர்வு ஒன்றைப் படிக்கத் தேர்வு செய்கிறது என்றால் அதை அனுமதியுங்கள். படிப்பதற்கான மனநிலையும், நேரமும், விருப்பமும், பகிர்ந்து கொள்ள நட்புமே புத்தக வாசிப்பில் முக்கியமானவை.
இரண்டாவது பரிந்துரை. எழுத்தையும் எழுத்தாளர்களையும் விமர்சனம் செய்வது எளிமையானது. ஆனால் புரிந்து கொள்வது எளிதானதில்லை. அதற்கு வாசகன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு படைப்பையும் வாசிப்பதற்கு மூன்று விசயங்கள் முக்கியமானவை. ஒன்று அகப்பார்வை. அதாவது நாம் எதை வாசிக்கிறோமோ அதை நம் மனதால் உணர்ந்து கொள்வது. (perception) ,
இரண்டாவது கற்பனை. (imagination) படைப்பின் ஊடாக வெளிப்படும் மனிதர்கள், நிலக்காட்சிகள், நிகழ்வுகள், நினைவுகளைக் கற்பனை செய்து புரிந்து கொள்ளும் இயல்பு.இதன் மூலமே கதையோ கவிதையோ நாம் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்
மூன்றாவது கற்றல் (learning) எழுத்தின் வழியாக நாம் கற்றுக் கொள்ள முன்வருவது. இது தகவலாகவோ, அறிவுதொகுப்பாகவோ, உண்மையாகவோ. வாழ்வியல் அனுபவமாகவோ எவ்விதமாகவும் இருக்கலாம். அதை நாம் கற்றுக் கொள்கிறோம் என்ற ஈடுபாடும், தீவிர அக்கறையுமே புத்தகத்தை ஆழ்ந்து வாசிக்க உதவும்.
ஒரு புத்தகம் புரியவில்லை என்றால் கொஞ்ச காலம் கழித்து மறுபடி படித்துபாருங்கள். அப்படியும் புரியவில்லை என்றால் இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்கள். அதற்காக புத்தகம் தவறானது என்ற முடிவிற்கு அவசரமாக வரவேண்டாம். காரணம் எளிய வரிகள் கூட இன்றும் புரிந்து கொள்ளபடாமலே இருக்கின்றன. ஆத்திசூடியில் வரும் ஙப்போல்வளை என்பதற்கு என்ன பொருள் என்று கேளுங்கள். எண்பது சதவீதம் பேர் விழிப்பார்கள். ஆகவே எளிய விசயங்களில் கூட புரியாமை இருக்கவே செய்கிறது. கண்ணால் மரத்தை பார்த்துவிட முடியும். அதன் வேர்களை கண்ணால் பார்த்து தெரிந்து கொண்டுவிட முடியாது. அப்படி தான் புத்தகங்களும்.
புத்தகங்களுடான நமது உறவு எப்போதுமே உணர்வுபூர்வமானது. ஆகவே புத்தக வாசிப்பில் உணரச்சிவெளிப்பாட்டிற்கு முக்கிய இடமிருக்கிறது. ஒரு புத்தகம் எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. எந்த கணங்களில் அது வாசகனை ஒன்றிணைக்கிறது. எந்த நிலைகளில் வாசகனை மீறிச்செல்கிறது என்று வாசகன் எப்போதுமே உன்னிப்பாக அவதானிக்கிறான்
அத்தோடு வாசிப்பின் வழியாக ஒரு இன்பம் தூய்த்தலை வாசகன் நிகழ்த்துகிறான். இது புத்தகம் வாசிப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று. ஜனரஞ்சமான நாவல்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் அது தரும் உடனடி வாசிப்பு இன்பமே. அதே போல செவ்வியல் படைப்புகள் பலமுறை திரும்பத் திரும்ப வாசிக்கப் படுவதற்கும் அதன் தனித்துவமான வாசிப்பு இன்பமே முக்கிய காரணமாகயிருக்கிறது.
வாசிப்பின் வெற்றியை முடிவு செய்வதில் வாசிப்பு இன்பத்திற்கு எப்போதுமே பெரிய பங்கிருக்கிறது. ஆகவே சுவாரஸ்யமாக இருப்பது இலக்கியதரமில்லாதது என்று முடிவு செய்துவிட முடியாது. அதே நேரம் வெறும் சுவாரஸ்யம் ஒரு போதும் இலக்கியமாகிவிடாது.
புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே புத்தக வாசிப்பின் பெரிய சவால். ஒரு புத்தகம் புரிந்து கொள்ளபடாமல் போவதற்கு புத்தகம் மட்டுமே காரணமாக இருந்துவிடாது. வாசிப்பவனுக்கும் சமபங்கிருக்கிறது. அர்த்தம் புரியாமல் போவது வேறு. எதற்காக எழுதப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளாமல் போவது வேறு.
ஒன்று அதன் மொழி மற்றும் வாக்கிய அமைப்புகள் காரணமாக அது புரியாமல் போயிருக்க கூடும். எந்தப் பொருள் பற்றி பேசுகிறதோ அது நமக்கு பரிச்சயமற்றிருக்ககூடும். அல்லது அது ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டிய பயற்சி தேவைபட்டதாக இருக்ககூடும்.
அல்லது அந்த கதையோ. கவிதையோ எதைப்பற்றி பேசுகிறதோ அது நேரிடையாக இல்லாமல் மறைமுகமாக. அரூபமான தளங்களில் வெளிப்படுத்தபட்டிருக்க கூடும். ஒரு படைப்பைப் புரிந்துகொள்ள அது குறித்து ஆதாரமான அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். இசையை போல படைப்பை நாம் கற்பனை செய்து கொள்வதன் வழியே ஆழமான தளங்களை நோக்கி வாசிப்பை நகர்த்திக் கொண்டுபோக முடியும்.
சில புத்தகங்களை வாசிப்பதற்கு வயதும் அனுபவமும் போதாமல் இருக்க கூடும். அந்தப் புத்தகம் இன்னொரு வயதில் இன்னொரு மனநிலையில் புரிவதோடு நெருக்கமாகவும் மாறிவிடும். சமூக கலாச்சார, சரித்திர, விஞ்ஞான அறிவும், சங்கேதங்கள், குறியீடுகள், கவித்துவ எழுச்சிகளை புரிந்து கொள்ளும் நுட்பமும் வாசகனுக்கு அவசியமானவை. அவை ஒரு நாளில் உருவாகிவிடுவதில்லை. தொடர்ந்த வாசிப்பும், புரிதலுமே அதை சாத்தியமாக்குகின்றன
வர்ஜீனியாவும் அதையே சொல்கிறார். புத்தகங்களை நாம் எப்போதுமே இன்னொரு புத்தகத்தோடு ஒப்பிடுகிறோம். இந்த ஒப்பீட்டினை விமர்சனம் என்று நினைக்கிறோம் . ஒப்பிடுவது தவறில்லை. ஆனால் எதை எதோடு ஒப்பிடுகிறோம். அப்படி ஒப்பிட என்ன காரணம். என்று யோசிப்பதேயில்லை.
ஒவ்வொரு புத்தகமும் ஒரு மனப்போக்கின் வெளிப்பாடு. அதன் தனித்தன்மையை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதை ஒப்பிடு செய்து பார்க்கலாம். மோசமான புத்தகங்களை கழித்துக்கட்ட ஒப்பீடு அவசியம் தான். ஆனாலும் அப்போதும் கூட அந்த புத்தகத்தை பற்றிய தீர்ப்பு போன்று முடிவுகளை வெளிப்படுத்துவதை விட அதை எப்படி புரிந்து கொண்டேன், அதில் என்ன அம்சங்கள் மிகையாகவோ, வலிந்து உருவாக்கபட்டதாகவோ, செயற்கையாகவோ, பொருத்தமில்லாமில்லாமோ இருக்கிறது. அது எழுத்தாளனின் நோக்கமா. அல்லது வாசகன் அப்படிப் புரிந்து கொள்ள சுதந்திரமிருக்கிறதா என்று விவாதத்திற்கான புள்ளியாகவே வளர்த்து எடுக்க வேண்டும்.
நாவலை வாசிப்பது என்பது ஒரு பெரிய அடுக்குமாடி கட்டிடம் ஒன்றை தூரத்தில் இருந்து பார்த்து அது ஒரு கட்டிடம் என்று சொல்லிக் கடந்து போவதை போல எளிதானதில்லை. கண்ணில் பார்ப்பதைப் போல இலக்கியத்தில் யாவும் உடனே புரிந்துவிடாது. வார்த்தைகளை கொண்டு உருவாக்கிய உலகமது. ஆகவே அதைப் புரிந்து கொள்ள நீங்கள் எழுத்தாளரின் சகஜீவி போல. உடன் வேலைசெய்யும் ஒருவரை போல இணக்கமான மனநிலையோடு அணுகுங்கள்.
ஒரு நண்பனை போல அவனோடு சேர்ந்து பயிலுங்கள். சேர்ந்து உரையாடுங்கள். எழுத்து ஒரு திறந்த உரையாடல். எல்லா எழுத்தாளர்களும் இயல்பில் வாசகர்களே. ஆகவே அவர்களும் நம்மை போலவே ஏதோ சில புத்தகங்களின் தீவிர வாசகர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
எழுத்தாளர் பிரபலமானவர். புகழ் அடைந்தவர் என்பதற்காக எந்தப் புத்தகத்தையும் நல்லது என்று முடிவு செய்யாதீர்கள். நல்ல எழுத்தாளர்கள் மோசமான புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள். மோசமான எழுத்தாளர்கள் சமயங்களில் நல்ல புத்தகங்களை எழுதிவிடுகிறார்கள். ஆகவே புத்தகம் அதற்கான விதியை கொண்டிருக்கிறது. ஆகவே எழுத்தாளனின் பெயர் புகழால் மட்டுமே வாசகனின் விருப்பதிற்கு உரியதாக புத்தகங்கள் அமைந்துவிடுவதில்லை.
ஷேக்ஸ்பியர், டிக்கன்ஸ்,விக்டர் க்யூகோ, பால்சாக், மாபசான், டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி உள்ளிட்ட உலகில் உள்ள பெரும்பான்மை வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களில் சில மிக குறைவான வாசகர்களையே பெற்றிருக்கிறது என்று அறிந்தேயிருந்தார்கள். லட்சம் பேர் படிப்பதால் எந்த ஒரு புத்தகமும் உயர்ந்த இலக்கியம் ஆகிவிடாது. நூறு பேர் மட்டுமே படிப்பதால் அது தரம்குறைந்தது என்று எண்ணிவிட முடியாது. புத்தகங்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கை நிலையானதில்லை. அது மாறிக் கொண்டேயிருக்க கூடியது.
ஒவ்வொரு புத்தகத்தையும் வாசகன் தனது ஒரு குறிப்பிட்ட மனநிலையில் இருந்தே படிக்கிறான். அதுவே புத்தகத்தைத் தேர்வு செய்கிறது. அதனால் தான் ஒரே நேரத்தில் வாசகனால் பல்வேறுவிதமான எழுத்தாளர்களின் புத்தகங்களை படிக்கவும் ரசிக்கவும் முடிகிறது.
ஒரு புத்தகம் முழுவதும் பிடிக்காமல் போவது என்பது வேறு . புத்தகத்தின் சில பகுதிகள் பிடித்திருக்கிறது என்பது வேறு. பலநேரங்களில் முழுமையாக ஒரு புத்தகம் நமக்கு பிடித்திருக்காது. ஆனால் அதில் உள்ள சில நல்ல வரிகள் பத்திகளுக்காக அதை வாசித்து கொண்டேயிருப்போம்.
கதை கவிதை நாவல் சிறுகதை, கட்டுரை வாழ்க்கை வரலாறு, விமர்சனம் என இலக்கியத்தினை எத்தனையோ விதமாக வகைப்படுத்தி வைத்திருக்கிறோம். வாசகன் ஒவ்வொன்றையும் வாசிக்க ஒருவிதமான பயிற்சியும் நுட்பமும் வைத்திருக்கிறான். அதற்கென அவன் எந்த விசேச பயிற்சியும் எடுத்துக் கொண்டதில்லை
கவிதையில் அரூபமாக உள்ள ஒன்றை எளிதாக புரிந்து கொள்ளும் வாசகன் நாவலில் அரூபமான, மாயமான சம்பவங்களை ஒத்து கொள்ள மறுக்கிறான். தர்க்கம் செய்கிறான். அது தான் வாசகனின் இயல்பு. ஆனால் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கையில் அது நாவல் போல உணர்வதும், நாவலை வாசிக்கையில் அது உண்மையான மனிதர்களின் வாழ்வு போல நம்பபடுவதுமே இலக்கிய வாசிப்பின் நுட்பம்.
இன்று வாசகன் ஒரு ரசிகன் என்பதைத் தாண்டி எழுத்தாளனுக்கு இணையாக வைத்து பேசப்படுகிறான். தான் எப்படி ஒன்றைப் புரிந்து கொண்டேன் என்பதை முன்வைப்பதே வாசிப்பின் முதன்மை செயல்பாடாக உள்ளது.
புத்தகத்தைப் பற்றிய ஆசிரியரின் முடிவுகள் இன்று வாசகனை கட்டுபடுத்துவதில்லை. சமூகம் , உளவியல், மொழியியல், தத்துவக்கோட்பாடுகள், தர்க்கம் மற்றும் விமர்சன பார்வைகளின் வழியே ஒரு படைப்பை ஆழ்ந்து அணுகி அதன் சமூக கலாச்சார அரசியல் தளங்களை, புரிதல்களை கண்டு அடைவதும் விமர்சிப்பதும் வாசகனின் முன்உள்ள சவாலாக உள்ளன.
ஆகவே வாசகன் ஒரு புத்தகத்தின் வழியே எழுத்தாளனின் மன அமைப்பை , அவனது பலம் பலவீனஙகளை ஆராய்கிறான். அதற்கான உளவியல் காரணங்களை கண்டுபிடிக்க முயற்சிக்கிறான். மொழியை எழுத்தாளன் பயன்படுத்தும் முறையும் அதன் அர்த்த தளங்களையும் கவனமாக பரிசீலனை செய்கிறான். விஞ்ஞான பரிசோதனை கூடங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வு போல துல்லியமான தர்க்க ரீதியான ஆய்வுப்பொருளாக புத்தகங்களை வாசிக்கும் தீவிர வாசிப்பு நிலை இன்று சாத்தியமாகியிருக்கிறது.
அதற்காக ரசனை சார்ந்து வாசிப்பு கைவிடப்படவில்லை. பெருவாரியான வாசகர்கள் இன்றும் தங்களது புத்தக வாசித்தலுக்கான அடிப்படையாக ரசனையை கொண்டிருக்கிறார்கள். அந்த ரசனையின் தரமும், நுட்பமும் முன்பை விட இன்று வளர்ந்திருக்கிறது. எழுத்தாளரை ஒரு ரட்சகனை போல காண்பதை தாண்டி, எழுத்தாளன் மனசாட்சியை போல செயல்படுகிறான் என்றே வாசகர்கள் உணர்கிறார்கள்.
புத்தகத்தைப் புரிந்து கொள்ள வாசிப்பின் வழியாக நாம் பெற்ற அனுபவத்தை எழுதிபார்ப்பதே சிறந்தது என்கிறார் வர்ஜீனியா. காரணம் அப்போது தான் சொற்கள் எவ்வளவு வலிமையானவை. எந்தச் சொல்லை எப்படி பயன்படுத்துகிறோம், அதில் எவ்வளவு சிரமம் சவால் உள்ளது என்ற எழுத்தின் நுட்பம் பிடிபடும் என்கிறார். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பொருட்கள் நிகழ்வுகள் எப்படி வாக்கியங்களின் வழியே ஒன்றிணைக்கபடுகின்றன என்று நுணுகி வியந்து புரிந்து கொள்ள முயற்சிப்பவனே புத்தகத்தினை கொண்டாடுகிறான்
வாசகன் என்பதே ஒரு கற்பனை தான். ஒரு வாசகன் என்பவன் எப்படியிருப்பான் என்று இதுவரை தீர்மானமாக ஒரு சித்திரத்தை முடிவு செய்யவே முடியாது. ஆகவே உலகின் வியப்பூட்டும கற்பனை கதாபாத்திரம் தான் வாசகன். அந்த முகமூடியை யாரும் அணிந்து கொண்டுவிட முடியும். அது யாவருக்கும் பொருந்தக்கூடியது என்கிறார் ஜோர்ஜ் லூயி போர்ஹே,
ஏய் வாசக உனக்கு தான் எத்தனை எழுத்தாளர்கள் என்று நகுலன் ஒரு கவிதை வரிசொல்கிறது. அது தான் உண்மை.
வர்ஜீனியா வுல்பின் கட்டுரையை போல நானும் இதே கேள்விக்கான சில பதில்களை வைத்திருக்கிறேன். என்வரையில் ஒவ்வொரு புத்தகமும் மானுட வாழ்வின் ஏதோ சில புதிர்களை அவிழ்க்க முயற்சிக்கிறது. மனித இருப்பு குறித்த சில கவலைகள், ஆதங்கங்கள், வருத்தங்கள், சந்தோஷங்களை ஆவணப்படுத்துகிறது.
இயற்கை, பிறப்பு, இறப்பு, பசி, காமம், மூப்பு , நோய்மை, அதிகாரம், வெற்றி தோல்வி, விதிவசம் என்று எல்லா நூற்றாண்டிலும் மனிதன் சந்தித்த ஆதாரமான கேள்விகளுக்கான விடை தேட முயற்சிக்கிறது. மனித வாழ்வின் மீது நிஜமான அக்கறை கொள்கிறது. அதை மேம்படுத்தவும், சகமனிதனைப் புரிந்து கொள்ளவும் உதவி செய்கிறது.
அன்றாட வாழ்க்கை சார்ந்து உருவாகும் வலிகள், தோல்வியுணர்வு, வெறுப்பு, ஏமாற்றம், வெறுமை, இயலாமை, நிர்கதி யாவும் கடந்து மனிதனை வாழ்வின் மீது பற்று கொள்ள வைக்கிறது. மானுட நினைவுகள் காற்றில் கரைந்து போய்விடாமல் காப்பாற்றி வைக்கிறது.
ஆகவே புத்தகங்கள் வாழ்வின் சின்னசிறிய ஆவணங்கள். அதன்வழியே மனிதர்கள் கடந்தகாலத்தை அறிந்து கொள்ள முடியும். நிகழ்காலத்தை சந்திக்க துணை கொள்ளலாம். எதிர்காலத்தை திட்டமிட முடியும். நல்ல புத்தகங்கள் இதன் சாயல்களைக் கட்டாயம் கொண்டிருக்கின்றன.
More Info : http://www.sramakrishnan.com/?p=1542
No comments