Just relax

Just relax
Just Relax__keep deep breath..

காதலா, ஈர்ப்பா?

நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் ஆறு முறையாவது காதல் மயக்கத்தை மனித மனத்துக்குக் காட்சி ஊடகங்கள் தந்துகொண்டே இருக்கின்றன. இதனால் நம்முடைய யுவதிகளும் இளைஞர்களும் எப்படியாவது காதல் வயப்பட்டாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்கு உளவியல்ரீதியாக ஆட்படுகிறார்கள்.


அதிலும் காதலர் தினத்தன்று துணையின்றி இருப்பதே ஏதோ பெருத்த அவமானம்போல இளைஞர்களின் ஆழ்மனத்தில் விதைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இப்படி வணிகச் சந்தையின் நோக்கத்துக்காகக் கட்டமைக்கப்படும் போலியான காதல் கற்பிதத்தில் சிக்கிவிடுவதாலேயே பிறகு உறவுச் சிக்கலிலும் பலர் அகப்பட்டுத் தவிக்க நேர்கிறது.
நாம் எப்படிக் காதல்கொள்ள வேண்டும் என்பதைத் திரைப் படங்களும் விளம்பரங்களும் இணைய வீடியோக்களும் தீர்மானிக்கின்றன. அவற்றில் புனையப்படுபவை காதல்தானா? ஒருவரை மற்றொருவர் தாங்கிப்பிடிப்பதிலும் பரஸ்பரம் அக்கறைகொள்வதிலும் கைகோத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதிலும் ஆரோக்கியமான எல்லைகளை வகுத்துக்கொள்வதிலும்தானே காதல் ஜீவித்திருக்க முடியும்! அத்தகைய உறவுக்கு பரஸ்பர மரியாதையும் நம்பிக்கையும்தானே அச்சாணி! ஆனால், ஒருவரின் நடத்தையில் வேடிக்கையான மாற்றங்கள் வெளிப்படுவதே, இங்கே காதலின் அறிகுறியாகத் தொடர்ந்து காட்டப் பட்டுக்கொண்டிருக்கிறது. நிலையான காதலுக்கும் தற்காலிகமான ஈர்ப்புக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொண்டாலே காதல் நம் வசப்படும்.

காதலா, ஈர்ப்பா?

உடனடியாக வருவது ஈர்ப்பு, காலப்போக்கில் வளர்வதே காதல்.

வீரியம் மிகுந்ததானாலும் தற்காலிகமானது ஈர்ப்பு. நாளடைவில் ஆழமாகவும் அழுத்தமாகவும் வளர்வதே காதல்.

 பூரணத்துவத்தைத் தேடுவது ஈர்ப்பு. இதனால் முகமூடி அணிந்துகொள்ள அது ஒருவரை நிர்ப்பந்திக்கும். ஒருவரின் நிறைகளோடு குறைகளையும் ஏற்றுக்கொள்ளப் பக்குவப்படுத்துவதே காதல்.

போலியான பிம்பத்தைத் தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்குள் மாட்டிக்கொள்வதால் ஈர்ப்பு சோர்வடையச் செய்யும். நீங்கள் நீங்களாகவே இருக்க அனுமதிப்பதால் காதல் சக்தி தரும்.

பொறாமையும் சுயநலமுமே ஈர்ப்பில் மிஞ்சும். நம்முடைய நற்பண்புகள் மென்மேலும் மேன்மை அடைய காதல் கைகொடுக்கும்.

வாக்குவாதத்தில் ஈர்ப்பு தவிடுபொடியாகும். காதல் எதிர் கருத்தை அனுமதிக்கும், மதிக்கும்.

ஈர்ப்பு சுயநலம் மிகுந்தது. நேசத்துக்குரியவரின் நலன் காதலில் பிரதானமானது.

நம்முடைய போதாமையைப் பூர்த்திசெய்யவே ஈர்ப்பு நம்மை உந்தித்தள்ளும். அனைவரின் இருப்பையும் காதல் அங்கீகரிப்பதால் அங்கு நம்முடைய அல்லது மற்றவருடைய போதாமை முன்னிறுத்தப்படுவதில்லை.

அவரசம் ஆபத்து
இது ஈர்ப்பு மட்டுமே ஆகையால் இந்த உறவுக்கு எதிர்காலம் இல்லை என்பதை இருவருமே புரிந்துகொண்டால் யாருக்கும் பாதகம் இல்லை. ஆனால், ஈர்ப்பு கல்யாணத்தில் முடிந்துவிடுவதுதான் இங்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் துர்ப்பாக்கியம். இப்படி அவசரப்பட்டு மாட்டிக்கொள்ளும் இருவரும் கசப்பான மண வாழ்க்கையில் சிக்கித் தவிக்கிறார்கள்.
இதற்குப் பதிலாகச் செய்ய வேண்டியது, நீங்கள் ஒருவரால் ஈர்க்கப்படுவதாக உணர்ந்தால் முதலில் அந்த உணர்வை மிகைப்படுத்தாமல் அமைதி காத்திடுங்கள். உடனடியாகக் கற்பனை உலகில் சஞ்சரிப்பதைத் தள்ளிப் போடுங்கள். அவசர அவசரமாக நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வது, எப்படியாவது அந்த நபரிடம் உங்கள் உணர்ச்சிப்பெருக்கை வெளிப்படுத்துவது உள்ளிட்டவை மேலும் குளறுபடிகளுக்குத்தான் வழிவகுக்கும். முதலில் ஆரோக்கியமான நட்புறவை அவருடன் ஏற்படுத்திக்கொள்ள முயலுங்கள். அந்த நட்பு நீடித்தால் உங்களுடைய இணையாக அவர் மாறுவதற்கான சூழல் கனியும். உண்மையான காதல் உயிர்ப்புடன் வாழும்!
‘மனதோடும் கொஞ்சம் பேசுவோம்’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் குழந்தை, பதின்பருவத்தினருக்கான மனநல ஆலோசகர் ஆர்த்தி C. ராஜரத்தனம். மாணவர்களின் மனநலம் தொடர்பான சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.
முகவரி: வெற்றிக்கொடி, இந்து-தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002,
மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

தொகுப்பு: ம. சுசித்ரா
கட்டுரையாளர் குழந்தை மற்றும் பதின்பருவத்தினருக்கான மனநல ஆலோசகர்


Thanks to link

No comments