Just relax

Just relax
Just Relax__keep deep breath..

Best Posts

மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்!


வாழ்ந்து படிக்கும் பாடங்கள்

மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்!

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

பெரும்பாலான மனிதர்கள் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறார்கள். அவர்கள் நம்புவதும், எதிர்பார்ப்பதும் பெரும்பாலும் யதார்த்த வாழ்க்கைக்கு ஒத்துப் போவதாக இருப்பதில்லை.

 நிஜமாக முடியாத ஒரு நேர்கோடான, சீரான வாழ்க்கைக்காக ஆசைப்படுகிறார்கள். அப்படி ஒரு வாழ்க்கை யாருக்குமே என்றுமே இது வரை அமைந்ததில்லை. இனி அமையப் போவதுமில்லை.

அதனால் அவர்கள் எதிர்பார்ப்புகளும், நடைமுறை நிஜங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாகவே இருக்க, அவர்கள் வாழ்க்கை முழுவதையும் பிரச்சினைகளாகவே  காண்கிறார்கள். அதன் காரணமாக தினசரி வாழ்வில் சீக்கிரமாகவே அமைதியை இழந்து தவிக்கிறார்கள்.


உலகம் தன்னிஷ்டப்படியே இயங்குகிறது. நிகழ்வுகள் பலதும் நம் கருத்துக்களை அனுசரித்துப் போவதில்லை. நம்மால் முழுவதும் உணர முடியாத ஏதோ ஒரு விதியின்படியே பலதும் நடக்கின்றன. அதை ஏற்றுக் கொள்கிறீர்களா, இல்லையா என்று உலகம் உங்களிடம் கேள்வி கேட்டு எதையும் நடத்துவதில்லை. பல சமயங்களில் உங்களுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை தரப்படுவதில்லை. அப்படி இருக்கையில் நம் கட்டுப்பாட்டில் இல்லாத,
நம்மால் மாற்றியமைக்க முடியாதவற்றை எண்ணி வருந்துவதும், புலம்புவதும், கலங்குவதும் அந்த நிலைமையை எள்ளளவும் மாற்றி விடப் போவதில்லை.

சின்ன சின்ன அசௌகரியத்திற்கு கூட பலரும் அமைதியிழந்து தவிப்பதும், முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதும் என்னவொரு அறியாமை? மன அமைதியை இது போன்ற விஷயங்களுக்கெல்லாம் இழக்க ஆரம்பித்தால் மனம் அந்த அளவு பலவீனம் என்றல்லவா அர்த்தம். எது வேண்டுமானாலும் எவ்வளவு சீக்கிரமும் அதைப் பதட்டமடையச் செய்து விடும் என்றும், சுலபமாக அசைத்து விடும் என்றல்லவா பொருள்.
அதே போல் நிறைய சின்ன விஷயங்கள் பலரையும் தேவைக்கும் அதிகமாக மன அமைதி இழக்கச் செய்கின்றன.
எதிர்பார்த்தபடி அடுத்தவர்கள்
நடக்காவிட்டால் மனம் குமுறுகிறது.
இந்தக் கூட்டத்தில் நீங்களும் இருக்கிறீர்களா என்று பாருங்கள். வாழ்க்கையில் சகிக்க முடியாதவற்றில் மாற்றக் கூடியவை நிறைய உண்டு. அதை மாற்றும் முயற்சியில் மனிதன் ஈடுபட்டதால் மட்டுமே உலகம் இந்த அளவு முன்னேறி இருக்கிறது. மனித சமுதாயம் வளர்ந்துள்ளதற்கும் காரணம் அதுவே. ஆனால் அதே போல மாற்ற முடியாத விஷயங்களும் நிறைய உண்டு.
இவை நாம் முகம் சுளிப்பதால் தவிர்க்க முடிந்தவை அல்ல. இது போன்றவற்றை ஏற்றுக் கொள்ளும் போது மட்டுமே வாழ்க்கையை நாம் லகுவாக்கிக் கொள்கிறோம். ஏற்றுக் கொள்ளும் போது நம் சக்தி வீணாவதைத் தடுக்கிறோம். மன அமைதியும் பெறுகிறோம்.
அப்போது இப்படி ஆகி விட்டதே’ என்பதிற்கு பதிலாக
 ‘இனி என்ன செய்வது?’ என்ற  ஆக்கபூர்வமான சிந்தனையால் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் இருந்தும் விடுபடும் வழியோ, அல்லது அந்த சூழ்நிலையைத் தாக்குப்பிடிக்கும் வழியோ பிறக்கிறது. இப்படி மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளும் போது உலகத்துடன் போராடுவதை விட்டு விட்டு நாம் வெற்றி பெறுகிறோம்.

நன்றி நன்றி நன்றி

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

No comments