Just relax

Just relax
Just Relax__keep deep breath..

Best Posts

ஏ.ஆர்.ரஹ்மான் போல Comfort zoneஐ உடைப்போம்

ஏ.ஆர்.ரஹ்மான் போல
Comfort zoneஐ உடைப்போம் 

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

எது உங்களுக்கு நன்றாக வருகிறதோ  அதை மட்டுமே வாழ்க்கை முழுவதும் செய்து கொண்டிருப்பதால் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் காண முடியாது.

இதை Comfort zone என்போம்.

அந்த எல்லைக்குள் மட்டுமே இருந்து விட்டால் நம் வாழ்க்கை அடுத்த படிநிலைக்கு செல்லாது.

போர் அடிக்கும்..

இப்ப ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க

ஏ.ஆர்.ரஹ்மான் தான் அந்த உதாரணம்

அவரின் தந்தை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 12 வயது இருக்கும் போது நோய்வாய்பட்டு இறந்து விட , குடும்ப பொறுப்புகள் அந்த சிறுவன் மீது விழுகிறது.

அதை ஏற்று பல இசையமைப்பாளர்களிடம் கீபோர்டு வாசிக்க செல்கிறார்.

சொற்ப வருமானம் தான் வருகிறது. மேலும் பல வருடங்கள் தொடர்ந்து வாசித்ததால் தமிழ் திரைப்பட இசை மீது வெறுப்பு அல்லது திகட்டல் தன்மை அவருக்கு வந்துவிட்டதாக கூறுகிறார்.

அதனால் அதில் இருந்தும் விடுபட்டு
தனது நண்பர்களிடம் சேர்ந்து பேண்ட் இசைக்குழுக்களை ஆரம்பிக்கிறார்.

இப்படி 1980 களில் பல பேண்ட்களில் அவர் அங்கம் வகித்துள்ளார்.

ஆனால் அதிலும் அவருக்கு நிலைகொள்ள மனம் இல்லை.

அப்போது தொலைக்காட்சி பிரபலமாகி வந்த காலம்.
விளம்பரங்களுக்கு இசை அமைப்பதை முழு நேர தொழிலாக மாற்றினார்.

விளம்பரம் ஓடும் முப்பது நொடி அறுபது நொடிகளுக்குள்
 இசை வடிவம் தரும் த்ரில்லிங்கான வேலை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது

அதன் வழி நன்றாக சம்பாதித்துக்கொண்டிருந்தார்.
அவரது ஏழ்மை நிலையை அதன் மூலம் சரி செய்து நன்றாகவே இருந்து வந்தார் .

அப்போது 1992ஆம் ஆண்டு அவருக்கு ஒரு முக்கிய வாய்ப்பு ரோஜா படம் மூலம் வந்தது.

அப்போதும் ஒரு படம் செய்து விட்டு மீண்டும் விளம்பரங்கள் எனும்  தனது கம்ஃபர்ட் சோனுக்குள் சென்று விடவே விரும்பியதாக பதிவு செய்கிறார்.

விளம்பரத்திற்கு இசை அமைக்கும் போது ஒரு சுதந்திரம் இருக்கும்.
ஆனால் திரை இசையில் அந்த சுதந்திரம் இருக்காது.
ஒரு வித Monotony இருக்கும் என்று பதிவு செய்கிறார்.

ஆனால் இறைவனின் நாட்டமாக ரோஜா பெரிய திருப்புமுனையாக மாறிப்போனது.
தேசிய விருது கிடைத்து அவரது வாழ்க்கை மாறியது.

பிறகு 1990களின் இறுதி வரை தமிழ் சினிமாவில் அவர் போட்டு நொறுக்கிய ரெக்கார்டுகள் அதிகம். அவார்டுகளுக்கென தனி அலமாரி வாங்கிய நாட்கள் போய் அவார்டுகள் வைக்க தனி வீடே ஒதுக்கும் நிலை வந்தது.

இப்போது தமிழ் சினிமா என்பது அவருக்கு கம்ஃபர்ட் சோனாகியது.
ரஹ்மான் போட்டா படம் ஹிட் ஆகும். ரஹ்மானின் இசைக்கு ரஜினியே காத்திருக்கும் நிலை வந்தது.

ஆம் .முதல்வன் படத்தில் கூட ஷங்கர் ஒரு காட்சி வைத்திருப்பார்.

 "அடுத்த முதல்வர் யார் வரணும்னு நினைக்கிறீங்க?" என்று நிருபரான லைலா பலரிடமும் கேட்பார்

பலரும் "புகழேந்தி" என்பார்கள்
ஒருவர் "ஏ.ஆர்.ரஹ்மான்" என்பார்.

உச்சமென்றால் அதுவரை யாரும் அடையாத உச்சத்தில் இருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

அவரது தமிழ் சினிமா பாடல்கள் மணிரத்னத்தின் படங்கள் உதவியால் வட இந்தியாவுக்கு பரவியது. அதுவரை டப்பிங் செய்யப்பட்ட பாடல்கள் மட்டுமே அவர்கள் செவிக்குச் சென்று வந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதல் ஹிந்தி பட வாய்ப்பு ராம் கோபால் வர்மா எடுத்த "ரங்கீலா" மூலம் வந்தது.

தனது கம்ஃபர்ட் சோனை விட்டு வெளியேறினார்.
வரிசையாக ஹிந்தி படங்கள் செய்தார்.

ஹிந்தி உலகம் அவரை அரவணைத்து இசையில் மயங்கி கிறங்கியது.

இப்போது சென்னையுடன் சேர்த்து  மும்பையிலும் ஒரு ஸ்டூடியோ ஆரம்பிக்க வேண்டிய நிலை வந்தது.

சுபாஷ் கய், அஷுதோஷ் கவாரிகர், அமீர் கான் என்று பல டைரக்டர்கள் இவரது பாடல்களுக்கு காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

சரி... இந்தியா பூரா பேர் வாங்கியாச்சு ..
வாழ்க்கை பூரா ஹிந்தி தமிழ் என்று ம்யூசிக் போட்டா போதும் என்று அவர் இருந்திருக்கலாம்.

அப்போது  அன்ட்ர்யூ லாய்ட் வெபர் எனும் ஆங்கில இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் மூலம் "Bombay dreams" எனும் ஆங்கில மேடை நாடகத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு வந்தது.

நம்மை ஒரு இசையமைப்பாளரே நம்பி அவரது படத்துக்கு கூப்பிடுகிறார். போய் தான் பார்ப்போமே என்று அங்கும் செல்கிறார்.

பாம்பே ட்ரீம்ஸ் ஹிட் ஆகிறது. அதற்கு பிறகு சர்வதேச இசையில் கவனம் செல்கிறது.
தமிழ் ஹிந்தி இரண்டிலும் படங்களை குறைத்து, ஆங்கில படங்களில் இசை அமைத்து ரிஸ்க் எடுக்கிறார்.

இங்கு பலரும் "ஏன்யா இவரு தான் இங்க முடி சூடா மன்னரா இருக்காருல இங்கயே இருக்க வேண்டியது தான.. ஏன் இப்டி ரிஸ்க் எடுக்குறாப்ல.." என்று பேசிக்கொண்டிருந்தனர்.. 

ஆனாலும் ஹாலிவுட் இசையின் வடிவங்களை கற்று உள்வாங்கி பல ஆங்கில படங்களுக்கு இசையமைத்தார்.
நடுவில் Warriors of heaven and earth என்ற மாண்டரின் மொழிப்படமும் இதில் அடங்கும்.

இப்படி தமிழ்நாடு..மும்பை...
லண்டன்... லாஸ் ஏஞ்சல்ஸ் என்று வருடத்தின் பாதிநாள் விமானத்தில் பறந்து பறந்து இசையமைத்தார்.

 அவருக்கு 2008 ஆம் ஆண்டு  "ஸ்லம்டாக் மிலினியர்" என்ற படத்திற்கு இரண்டு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.
என்னது ஆஸ்கார நம்மாளு வாங்கிட்டாரா?
யோவ் இதுக்குதான்யா தல ஹாலிவுட் போய்ருக்காப்ல.." என்று எல்லாரும் அப்போது  பேசினர்..

ரெண்டு
 ஆஸ்கார் வாங்கியாச்சு .
கோல்டன் குளோப் விருது.. கிராமி எல்லாம் வாங்கியாச்சு..
இனியும் வாங்க என்ன இருக்கு..
அவ்வளவு தான என்று நாம் நினைத்தால்
அதையும் உடைக்கிறார்..

சூப்பர் ஹெவி எனும் Rock music band ஒன்றில் சேர்கிறார். அதில் மேற்குலக பாப் இசை மேதைகள் சிலருடன் சேர்ந்து மேடையில் கீபோர்டு வாசிக்கிறார்.

அடக்கெரகமே.. இங்க இவர தலைலயும் நெஞ்சுலயும் வச்சு தாங்கிட்ருக்கோம். இவரு என்னடான்னா திரும்ப கீபோர்டு வாசிக்கிறாரு... என்று நானே நினைத்ததுண்டு..

இதுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு விளக்கம் வைத்துள்ளார்.

அந்த super heavy பேண்டில் நான் சேரும் வரை..பக்கா கூச்ச சுபாவம் கொண்ட Introvert ஆக இருந்தேன். அந்த பேண்ட் அனுபவம் தான் என்னை மாற்றியிருக்கு என்கிறார்.

ஆமாம் உண்மை தான் 1992 இல் இருந்து 2010 வரை அவர் பேட்டிகளில் விழா விருது மேடைகளில் மொத்தமாக கூட்டினாலும் முப்பது வார்த்தைக்கு மேல் பேசியிருக்க மாட்டார்.

அவ்வளவு கூச்ச சுபாவம் கொண்டவர்.

ஆனால் அந்த பேண்ட் அனுபவத்திற்கு பின்
இம்தியாஸ் அலி இயக்கிய ஹைவே படத்தில் "பட்டாக்கா குடி"பாடல் முழுவதும் சரளமாக பாடி நடித்திருப்பார்..

யோவ் . நம்மாளாயா இது.. என்ன தல இப்டி மாறிட்டாரு.. என்று வியந்து பார்த்த காலங்கள் அது.

இதே ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து சுகாசினி மணிரத்னம் அவர்கள் குறிப்பிடுகிறார்.

1992 ஆம் வருடம் ரோஜா படத்தின் முதல் பாடல் "சின்ன சின்ன ஆசை"யில் நடுவே "ஏலேலோ ஏலே லேலேலோ.." என்ற இடைஇசை வரும். அதை பாடியவர் ஏ.ஆர்.ரஹ்மான் தான். பல வருடங்கள் எனது செல்போனின் காலர் ட்யூனாக வைத்திருந்தேன்.

அந்த வரிகளை பாடும் போது கூச்சம் தெரியாமல் இருக்க ரெகார்டிங் ஸ்டூடியோ உள்ளே விளக்கை அணைத்து விட்டு பாடினாராம்.

ஆனால் அதே ஏ.ஆர்.ரஹ்மான் 25 வருடங்கள் கழித்து சிங்கப்பெண்ணே பாடலுக்கு தனியாக பாடி நடிக்கிறார். இதற்கு காரணம் அவரது கம்ஃபர்ட் சோனை விட்டு வெளியே வந்தது தான்.


 தனது இசையில் பாடகர்களை அறிமுகம் செய்வதில் கூட தனது கம்ஃபர்ட் சோனை உடைத்து சோதனைகள் செய்வதர் அவர்.

ஆரம்பத்தில் எஸ்பிபி சுஜாதா சித்ரா சாகுல் ஹமீது ஹரிஹரன் உன்னி கிருஷ்ணன் உன்னி மேனன்  என்று இருந்தாலும்...

பிறகு பிரபலம் அடைய அடைய பல புது குரல்களை அறிமுகம் செய்தார்.

அவர் அறிமுகம் செய்த குரல்கள் மட்டுமே சில நூறைத்தாண்டும்.

இப்போதும் கூட
தனது கம்ஃபர்ட் சோனான வெறித்தனமான ரசிகர்களான 90s கிட்ஸை கொஞ்சம் ஆறப்போட்டு விட்டு
இப்போது 2k kids க்கு இசை அமைக்க ஆரம்பித்து விட்டார்.

தனது இசை வாழ்க்கையில் ஒவ்வொரு நான்கு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நான் ஏற்கனவே கற்றதை மறந்து விட்டு வேறு ஒன்றை கற்கிறேன் என்கிறார். அதனால் தான் நான் இளமையாக இருக்கிறேன் என்றும் கூறுகிறார்.

அதிகம் பயிற்சி செய்கிறேன்...
அதிகம் புது முயற்சி செய்கிறேன்...

சில முயற்சிகளில் தோற்கிறேன்...
பல முயற்சிகளில் இறைவன் அருளால் ஜெயிக்கிறேன்...

ஆனால் எப்போதும் எனது இசையில் ஏதாவது புதிதாய் இருக்குமாறு மெனக்கெடுகிறேன் என்கிறார்.

இப்போதும் அவர் கொண்டு வந்த synthesiser தான் ஃபீல்டில் இருக்கிறது. ஆனாலும் அதையும் தாண்டி  இசைக்கருவிகளில் கூட
Harpejji
continuum finger board
என்று புதிய எலக்ட்ரானிக் கருவிகளை புகுத்துகிறார்.

ராகங்களை அடிப்படையாக வைத்து அப்படியே இசையமைக்காமல் அதில் சில மாற்றங்களைச் செய்கிறார்.

இப்ப என்னடான்னா
99 songs என்ற  படத்திற்கு கதை எழுதுகிறார்.

le musk என்ற விர்ச்சுவல் ரியாலிட்டி படத்தை இயக்கி வருகிறார்.

"Qutb e kirpa" என்ற ஆர்கஸ்ட்ராவை நடத்தி வருகிறார்

"KM music conservatory" என்ற இசை கல்லூரியை ஆரம்பித்து மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் இசை ஆர்வம் திறமை உள்ள மாணவர்களுக்கு இலவச இசை பயிற்சி அளிக்கிறார்.

இப்படி தினம் தோறும் தனது கம்ஃபர்ட் சோனில் இருந்து வெளியே வருவதால் தான் அவரால் இருபது வருடம் கழித்தும் புதுமையான இசையை வழங்க முடிகிறது.



ஏதாவது ஒன்றை புதிதாக கற்கும் போதும் நீங்கள் உங்கள் கம்ஃபர்ட் சோனை உடைக்கிறீர்கள் என்று அர்த்தம்

நமது கம்ஃபர்ட் சோனை விட்டு வெளியே வராமல் பெரிய முன்னேற்றம் ஏற்படாது என்பதற்கு ஏ.ஆர்.ரஹ்மானே சாட்சி...

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர் 
சிவகங்கை

No comments