Just relax

Just relax
Just Relax__keep deep breath..

Best Posts

பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். உலகம் உங்கள் வசப்படும்

*🌿🌹பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். உலகம் உங்கள் வசப்படும்.*
*༺🌷༻*

புகழ்ச்சி ஒரு மந்திரம், புகழ்ச்சிக்கு அடிமையாகாதவர் புவியில் யாருமில்லை. ஒருவரை ஆத்மார்த்தமாகப் பாராட்டும் போது அவரின் அகமும் குளிரும். முகமும் மலரும்.

காலையில் கணவர் வேலைக்குச் செல்லக் கிளம்பும் போது வழியனுப்ப ஆசையாக வந்து நிற்கும் மனைவியைப் பார்த்து "உன் முகத்தைப் பார்த்துட்டுப் போனா எல்லாக் காரியமும் சக்ஸஸ் தான், உன்னைப் பார்த்துக்கிட்டே இருந்தா எனக்கு வேலைக்கு நேரமாகும்” என்று கூறும் கணவர் அசாதாரண(அசத்தல்) ரகம்.இவர் புகழ்ச்சி என்ற மந்திரத்தின் தந்திரம் தெரிந்தவர். இவர் தொட்டது துலங்கும்.
*༺🌷༻*
பாராட்டில் உண்மையும் கனிவும் இருக்க வேண்டும். முகஸ்துதியோ போலித்தனமோ இருக்கக் கூடாது.


குழந்தைகள் செய்யும் சிறிய நல்ல காரியங்களைக் கூடப் புகழ்ந்து பாருங்கள். மகரயாழ் அவர்கள் நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் தெரியும். எப்பொழுதும் தொட்டதெற்கெல்லாம் பாராட்டிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அதற்காகப் பாராட்ட நேரம், காலம் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை.
*༺🌷༻*
“எங்க சந்தோஷ் ரொம்ப சமத்து, நல்லாப் படிக்கிறான், ஆத்துலே என்ன வேலை சொன்னாலும் ஒரு சின்ன முகச்சுளிவு கூடப் பண்ணாம செய்வான்” என்று ஒரு தாய் தன் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினரிடம் தன் மகனைப் புகழ்கிறாள். “சந்தோஷ், மாமா, மாமி வந்திருக்கா, பக்கத்துக் கடையில் போய் கூல்டிரிங்க்ஸ் வாங்கிட்டு வா” என்ற வார்த்தையை முடிக்கும் முன் சந்தோஷ் சந்தோஷமாகக் கூல்டிரிங்க்ஸுடன் நிற்கிறான்.
*༺🌷༻*
பாராட்டு என்பது பாராட்டுபவருக்கும் மகிழ்ச்சி பாராட்டப்படுபவருக்கும் மகிழ்ச்சி. புகழ்வதில் தயக்கமே இருக்கக் கூடாது. பாராட்டுபவர் இனிமையான சொற்களையே செலவழிக்க வேண்டும். குறைகளாகத் தோன்றும் கசப்புகளைக் கூட பாராட்டு என்ற தேனில் குழைத்துத் தர வேண்டும்.
*༺🌷༻*
நம்மில் எத்தனை பேர் பேருந்து ஓட்டுனர்களுக்கும் ஆட்டோ ஓட்டுபவர்களுக்கும் நன்றி கூறுகிறோம். #மகரயாழ் அவ்வாறு அவர்களுக்கு நன்றி கூறி அவர்கள் திறமைகளைப் பாராட்டும் போது களைப்பின்றி இன்னும் உற்சாகமாகவும் சிறப்பாகவும் அவர்கள் தங்கள் பணிகளைச் செய்ய முடியுமே.
*༺🌷༻*
ஒருவரை உண்மையாகப் புகழும் போது அவர் மனதில் நீங்கள் ஒரு கோபுரத்தில் அமர்கிறீர்கள். அழகு-அன்பு-படிப்பு-பதவி-திறமை-இப்படி ஒருவரிடம் இருக்கும் நல்ல குணங்களை அறிந்து உண்மையாகப் புகழ்வதன் மூலம் உங்களை நீங்கள் உயர்த்திக் கொள்கிறீர்கள். அது மட்டுமில்லாமல் நீங்கள் புகழப்பட்டவரால் மனதில் நினைத்தக் காரியங்களையும் சாதித்துக் கொள்கிறீர்கள்.
*༺🌷༻*
தினந்தோறும் பூ வாங்கும் பூக்காரியிடம்,”அது என்னமோ தெரியலை ஈஸ்வரி, உன்னிடம் பூ வாங்கி சாமிக்குப் போட்டால் தான் மங்களகரமா இருக்கு, உனக்கு அப்படி ஒரு முகராசி” என்று சொல்லி பூக்காரியின் பூ முகம் மலர்வதை ரசித்துப் பாருங்கள்.
*༺🌷༻*
‘முன் வந்து நின்றால் தான் முகம் காட்டும் கண்ணாடி’ மனம் நிறைய நேசத்தையும் பாசத்தையும் வைத்துக் கொண்டு வெளித்தோற்றத்திலே எரிந்து விழுந்து கெட்ட பெயர் சம்பாதிக்கும் மக்கள் எத்தனை எத்தனை பேர்? மனதில் உள்ள அன்பை ஒளிவு மறைவில்லாமல் பாரட்டு என்ற அஸ்திரத்தைப் பயன்படுத்தி வெளிக்கொணருங்கள். வெற்றி நிச்சயம்.’மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்பதற்கேற்ப பாராட்டுவது என்பது ஒரு சிறிய செயல் தான். ஆனால் அது தரும் பலனோ அபரிமிதமானது. பாராட்டு விழுபவனை எழ வைக்கும்.
*༺🌷༻*
பாராட்டு என்ற சூத்திரம் உற்சாகத்தின் உறைவிடம். வெற்றிக்கான படிக்கட்டு. பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். *உலகம் உங்கள் வசப்படும்.*

No comments