Just relax

Just relax
Just Relax__keep deep breath..

உண்மையான வீரம் எது

 ஒரு அரசர் தன் மகனுக்கு போர் பயிற்சி கொடுப்பதற்காக ஒரு பயிற்சியாளரிடம் சேர்ப்பிக்கிறார். ஆறு மாதங்கள் கழித்து வருமாறு பயிற்சியாளர் சொல்கிறார்.

ஆறு மாதங்கள் கழித்து ஞாபகமாக அரசரும் பயிற்சி பாசறைக்கு செல்கிறார்.

அங்கு அவரது மகன் மிக ஆக்ரோஷமாக பயிற்சி செய்து கொண்டிருக்கிறான். அவனது தோள்கள் திணவெடுத்து இருக்கின்றன.

அங்கிருக்கும் தூண்கள், பலகைகள் என்று அனைத்தையும் அவன் கைகள் பதம் பார்த்திருந்தன. அவனது உடலெங்கும் தழும்புகளால் நிறைந்திருந்தன. மிகுந்த திருப்தியுற்ற அரசர் பயிற்சியாளரிடம் சென்று நன்றி கூறி தனது மகனை அழைத்து செல்லலாமா என்று கேட்டார்.

அவன் இன்னும் தயாராகவில்லை இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள்” என்றார். அரசரும் குழப்பத்துடன் சரி என்று சொல்லி சென்றுவிட்டார்.

அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் சென்றார். அப்போது அவரது மகன், மாமிச மலை போல் இருந்த, அந்த பயிற்சி பாசறையிலேயே ‘மிகச்சிறந்த’ வீரனுடன் மோதிக்கொண்டிருந்தான்.

மாமிச மலை’ தான் வெல்வான் என்றிருந்த கணத்தில், சட்டென்று அவனை புரட்டிப் போட்டு வீழ்த்தி, சீற்றத்துடன் கர்ஜனை செய்தான் மகன். முகமெல்லாம் பூரிப்புடன் பயிற்சியாளரை பார்த்து, “இப்போது அவனை அழைத்து செல்லலாமா” என்றார்.



இல்லை அவன் இன்னும் தயாராகவில்லை, இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள்” என்றார். தயக்கத்துடன் விடைபெற்ற அரசர் குழப்பத்துடன் நாடு சேர்ந்தார்.

அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பயிற்சி பாசறைக்கு வந்தார். அப்போது அவரது மகன் சண்டை நடக்கும் இடத்தில இருந்து விலகி நண்பர்களுடன் மழையை ரசித்துக்கொண்டிருந்தான்.

அரசர் பயிற்சியாளரை சந்தித்த முதல் நிமிடத்திலேயே “இப்போது அவன் தயாராய் இருக்கிறான், நீங்கள் அழைத்து செல்லலாம்” என்றார்.

அவன் ஆக்ரோஷமாக பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதெல்லாம் அவன் தயாரில்லை என்று சொன்ன நீங்கள், அவன் அமைதியாய் அமர்ந்திருக்கும் போது மட்டும் அழைத்து செல்ல சொல்கிறீர்களே ஏன்” என்று என்றார்.

அரைகுறையின் உச்சம் தான் ஆக்ரோஷம். வீரத்தின் உச்சம் என்றும் அமைதி தான்” என்றார் பயிற்சியாளர்.

புரியவில்லை” என்றார் அரசர்.

எப்பொழுது ஒருவனுக்கு திறமை குறைவாக இருக்கிறதோ, எப்பொழுது ஒருவனுக்கு தன் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறதோ அப்பொழுது தான் அவன் ஆக்ரோஷமாக இருப்பான். எப்பொழுது ஒருவனுக்கு மற்றவர் மேல் அன்பு வருகிறதோ, எப்பொழுது ஒருவன் முழு திறமையையும் அடைகிறானோ அப்பொழுது அவன் அமைதியில் ஐக்கியமாவான்.

அது தான் ஒரு தலைவனுக்குரிய தகுதி. உங்கள் மகன் நாடாளும் தகுதி பெற்று விட்டான் அவனை அழைத்து செல்லுங்கள்” என்றார்.

மனதை கவர்ந்தது.

No comments