வளரிளம் பருவத்துக் குழந்தைகளிடம் எப்படிப் பழகுவது?..
வளரிளம் பருவத்துக் குழந்தைகளிடம் எப்படிப் பழகுவது?..
தீபத்தைக் கொண்டு திருக்குறளும் படிக்கலாம். வீட்டையும் கொளுத்தலாம். சிறு கத்தியைக் கொண்டு பழத்தையும் நறுக்கலாம். கழுத்தையும் அறுக்கலாம். எல்லாம் நம் கையில் தானே இருக்கிறது? அதுபோல தொழில் நுட்ப வளர்ச்சி எந்தளவுக்கு நன்மை செய்கிறதோ அதைவிட அதிகமாக தீமையும் செய்கிறது என்பதை மறுக்க முடியாது. நமது வளரிளம் பருவக் குழந்தைகளிடம் செல்போன் கொடுக்கும் போது அதிலுள்ள நல்லது, கெட்டது எல்லாவற்றையும் சொல்லி, அவர்களது செல்போன் பயன்பாட்டை இயல்பாக, அவர்களுக்கு உறுத்தாமல் கண்காணித்து, தேவைப்பட்டால் வழிகாட்ட வேண்டும்.
நம் குழந்தைகள் எவ்வளவு வளர்ந்தாலும் நம் பார்வையில் அவர்கள் குழந்தைகள் தான். ஆனால் அவர்களுக்கென்று தனி மனம், உணர்ச்சி, விருப்பு வெறுப்புகள் உண்டு என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வளரிளம் பருவத்துக் குழந்தைகளிடம் முதலில் பெற்றோர் நண்பர்களாகப் பழக வேண்டும். அவர்கள் நம் மூலமாக இந்த உலகிற்கு வந்தவர்கள். நம்முடைய அடிமைகள் அல்ல என்று தெரிந்து கொள்ளுங்கள்.எது நடந்தாலும் முதலில் நம்மிடம் தெரிவிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை வளர்த்த வேண்டும். அப்படி அவர்கள் சொல்லும் போது அவர்கள் மீதே குற்றத்தை நாம் திருப்பக் கூடாது. அவர்கள் தவறே செய்திருந்தாலும் நாம் முதலில் அவர்களிடம் பரிவு காட்டி அரவணைக்க வேண்டும். நம் குழந்தைகளை நாம் மன்னிக்காமல் பின்பு யார் மன்னிப்பார்கள்?
அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும். அவர்களைக் கண்காணிப்பதாக நினைத்துக் கொண்டு பிரச்சினை செய்யக் கூடாது. அடக்கி வைக்கவும் நினைக்கக் கூடாது. இந்த வயதின் இயல்பான தூண்டுதல் காரணமாக அவர்கள் எதிர்பாலினரோடு பேசும் போது நாமும் இயல்பாக அவர்களோடு கலந்து கொள்ளலாம். நமது குழந்தைகளின் நண்பர்களை நாமும் நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும். அவர்களுடன் மனம் விட்டுப் பேசலாம். அவர்களது பேச்சைக் கத்தாமல், அடக்க நினைக்காமல் காதில் வாங்கலாம். அவர்களது சிந்தனை சரியாக இல்லையென்றால் பதறாமல் எடுத்துரைக்கலாம். அவர்களது கல்வியின் தேவை, எதிர்காலம் குறித்து மென்மையாக விவாதிக்கலாம். நமது ஆசைகள், கனவுகளை அவர்கள் மீது திணிக்கக் கூடாது. நம் மீதான அவர்களது நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். காதல், பாலுணர்வு போன்றவை தலைதூக்கும் பருவம் இது. முதலில் நாம் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். நிச்சயம் நம் வளரிளம் பருவத்துத் தளிர்கள் நம்மைப் புரிந்து கொள்ளுவார்கள்.
- கனலி..
No comments