ஏன் இலக்கியம் படிக்கவேண்டும்?
ஏன் இலக்கியம் படிக்கவேண்டும்?
#பிழைத்தல்_இருத்தல்_வாழ்தல்
#ஜெயமோகன்
ஒருமனிதன் தன் வாழ்நாளில் வாழும் புறவாழ்க்கை மிக மிக எல்லைக்குட்பட்டது. அவன் எத்தனை சாகசக்காரனாக இருந்தாலும், தன் வாழ்நாள்முழுக்க அவன் அலைந்து திரிந்தாலும் அவன் வாழ்க்கை மிகச்சிறியது.
ஆம், ஒரே சமயத்தில் இரண்டு நாற்காலிகளில் அமரும் வரம் மனிதனுக்கு அளிக்கப்படவில்லை.அவன் நடிக்கும் வேடங்கள் சிலவே இருக்க முடியும். நீங்கள் கணிப்பொறி நிபுணராக இருந்தால் நீங்கள் பாலைவனத்து நாடோடிப் பாடகனாக வாழ முடியாது. நீங்கள் பாலைவனத்து நாடோடி என்றால் நீங்கள் விவசாயி இல்லை.
இலக்கியம் ஒரு புல்நுனியை வைத்து மனதில் ஒரு காட்டை உருவாக்கிக் கொள்ளும் கலை.
உங்கள் சிறிய வாழ்க்கைக்குள் மாபெரும் வாழ்க்கையை நிகழ்த்தும் கலை. உங்கள் கற்பனை மூலம் ஒரு வாழ்க்கைக்குள் நீங்கள் பலநூறு பல்லாயிரம் வாழ்க்கையை வாழமுடியும். இலக்கியம் உங்களுக்கு எதை அளிக்கிறதென்று கேட்டீர்கள் என்றால் இன்னும் பெரிய வாழ்க்கையை என்றே பதில் சொல்லுவேன்.
நீங்கள் பிழைக்க விரும்பினால் உங்களுக்கு இலக்கியம் தேவையில்லை. ஆம் இலக்கியமே இல்லாமல் தன் வாழ்நாளை ஒருவர் கழித்துவிடமுடியும் என நான் நினைக்கிறேன். அந்தக் குறையையே அவர் அறியாமலும் இருக்க முடியும். ஒருவருடைய இருப்பை நிறுவ இலக்கியம் தேவையில்லை.
ஆனால் ஒருவர் வாழ விரும்பினால் அவருக்கு இலக்கியம் ஒரு மாபெரும் வாய்ப்பை கொடுக்கிறது. அவரது வாழ்க்கையை அது முடிவிலாததாக ஆக்குகிறது.
-ஜெயமோகன்
No comments