ஜென் கதைகள்
❤அது ஒரு பெரிய மைதானம். அங்கே மூன்று பையன்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
அந்த வழியாகச் சென்ற ஒரு சாமியார் அவர்களைக் கவனித்தார். குழந்தைகள் உற்சாகமாகச் சிரித்து விளையாடுவதைச் சிறிது நேரம் ரசித்தார். அதன்பிறகு அவர் மெல்லமாகக் கைதட்டி அவர்களை அழைத்தார்.
பையன்கள் சாமியாரை மேலும் கீழும் பார்த்தார்கள். அவருடைய விநோதமான உடை அலங்காரமும் ஜடாமுடியும் அவர்களுக்குச் சிரிப்பு மூட்டியது.
சாமியார் அவர்களைக் கேட்டார். ‘கண்ணுங்களா, நீங்க எப்பவும் இந்த மைதானத்திலதான் விளையாடுவீங்களா?’
‘ஆமா சாமி!’
‘எதுக்காக தினமும் விளையாடறீங்க? அதனால உங்களுக்கு என்ன பலன்?’
முதல் பையன் சொன்னான். ‘நல்லா விளையாடினா உடம்பு பலமாகும். அதுக்கப்புறம் நாம யாரையும் பார்த்துப் பயப்படவேண்டியதில்லை. எதிர்த்து வர்றவங்களையெல்லாம் ஊதித் தள்ளிடலாம்!’
இந்த பதிலைக் கேட்டுச் சாமியாருக்கு மிகவும் மகிழ்ச்சி. ‘நீ பெரிய பயில்வானா வருவே’ என்று அவனை ஆசிர்வதித்தார். அதன்பிறகு இரண்டாவது பையனின் பக்கம் திரும்பினார். ‘நீ ஏன்ப்பா தினமும் விளையாடறே?’
’ஜாலியா விளையாடினாதான் மனசுக்கு ரிலாக்ஸா இருக்கும். அதுக்கப்புறம் முகத்தைக் கழுவிகிட்டு உட்கார்ந்து படிச்சா எல்லாம் சட்டுன்னு புத்தியில ஏறும்!’
‘பிரமாதம். நீ பெரிய படிப்பாளியா வருவே’ என்று இரண்டாவது பையனை ஆசிர்வதித்தார் சாமியார். பிறகு மூன்றாவது பையனையும் அதே கேள்வியைக் கேட்டார். ‘நீ ஏன்ப்பா தினமும் விளையாடறே?’
அவன் சுருக்கமாகப் பதில் சொன்னான். ‘எனக்கு விளையாடப் பிடிக்கும். அதான் விளையாடறேன்!’
சாமியார் அவனை வணங்கினார். ‘இனிமே நீதான் என்னோட குரு!’
ஒவ்வொன்றுக்கும் காரணம், பின்விளைவுகள், லாப நஷ்டங்களையெல்லாம் யோசித்துக் குழம்பிக்கொண்டிருக்காமல் அந்தக் கணத்தைச் சொட்டு மிச்சம் வைக்காமல் அனுபவியுங்கள். அதுதான் ஜென்னின் முதல் படி!
NIce 👍 😊
ReplyDelete