Just relax

Just relax
Just Relax__keep deep breath..

Best Posts

இல்லாள்.....

ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்..

ஒருநாள் 'ஆபீஸ்' போய் வேலை செய்து பார். சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்..

அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல
குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன். என எதிர் சவால்விட்டாள்..

கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..

அவன் வீட்டில் இருக்க இவள் ஆபீஸ் போனாள். ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ். முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள். வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள். கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்..

மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள்..

கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள். பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே..

இலையில் வைத்த 'ஜாங்கிரியை' மூத்தவனுக்கு பிடிக்கும் என்று கைப்பையில் எடுத்து வைத்தாள். முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள். அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம்..

ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள், கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்..

இவளை பார்த்ததும், பிள்ளையா பெத்து வச்சிருக்க..? அத்தனையும் குரங்குகள். சொல்றதை கேட்க மாட்டேங்குது. படின்னா படிக்க மாட்டேங்குது. சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது. அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன். பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே என்று பாய..

அவளோ, அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா. என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள். விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன், 

ஏங்க.. இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டு பையனாச்சேஎன்று அலற. ஓஹோ , அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க..

அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது. இல்லாள் என்றும் , மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை...

இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் ஒரு பெண்ணின் பங்கு தலையாயது. அதுபோல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது..

ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில் இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..

இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கணவன்மீது மனைவியோ, மனைவி மீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண்டிருந்தால் தான் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ 
முடியும்...


முற்றும்

No comments