Just relax

Just relax
Just Relax__keep deep breath..

வீட்டுத் தோட்டம் அமைப்பது எப்படி?

வீட்டுத் தோட்டம் அமைப்பது எப்படி?


பெருகி வரும் மக்கள் தொகையின் காரணமாக, நம் நாட்டில் பெரும்பாலான இடங்கள் வீடுகள், குடியிருப்புகள் கட்டுவதற்காகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வீடுகளில் காய்கறித் தோட்டம் அமைப்பதற்காக தனி இடம் ஒதுக்குவது என்பது கடினமான விஷயமாக மாறிவிட்டது. சிறிய இடம் இருந்தாலும், அதிலும் ஒரு குடிசையைப் போட்டு வாடகைக்கு விடும் மனநிலையில் தான் அனைவரும் இருக்கின்றனர்.

மாடித் தோட்டம்

இதற்கு மாற்றாகத்தான் வீட்டின் மாடிப்பகுதியில் காய்கறி மற்றும் அலங்காரச் செடிகள், மூலிகைச் செடிகள் வளர்க்கும் முறையான மாடித் தோட்ட வளர்ப்பு முறை பரவலாக பெருகி வருகிறது. இதனை ‘கூரைத் தோட்டம்’ என்றும் அழைக்கிறார்கள். இந்த முறையின் மூலம் இரு வழிகளில் நாம் பலன் அடையலாம். ஒன்று வீட்டிற்கு தேவையான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும். மற்றொன்று வீட்டின் மாடிப் பகுதியில் அமைக்கப்படும் தோட்டமானது வீட்டின் மேற்பரப்புக்கு ஒரு தனி அழகையும், இயற்கை சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

மாடித் தோட்டம் அமைப்பது என்றால், முதலில் என்ன செய்ய வேண்டும்? எப்படி தோட்டம் அமைக்க வேண்டும்? செடி, கொடிகளை எப்படி பராமரிப்பது? போன்ற குழப்பங்கள் தேவையில்லை. சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் இதற்காக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் பெ.சாந்தியை தொடர்பு கொண்டு, பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.

மாடித் தோட்டம் அமைப்பது பற்றி தோட்டக்கலை உதவி பேராசிரியர் கீ.ஆ.சண்முகசுந்தரத்திடம் கேட்டோம். அவர் கூறிய தகவல்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

செடிகள் தேர்வு

மாடித் தோட்டம் அமைக்கும் போது செடிகளை தேர்வு செய்வதில் கவனம் அவசியம். பொதுவாக செடிகள் ஆணி வேர் மற்றும் சல்லி வேர் தொகுப்பை கொண்டதாக இருக்கும். இதில் ஆணிவேர் தொகுப்பை கொண்ட செடிகளை நடவு செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் நடவு செய்த 4 முதல் 5 ஆண்டுகளில் வேர் தொகுப்பானது வீட்டு கூரையின் கான்கிரீட் பகுதிக்குள் நுழைந்து சென்று விடும். இதனால் வீட்டிற்கு பாதிப்பு உண்டாகும் அபாயம் இருக் கிறது. எனவே சல்லி வேர் தொகுப்பு கொண்ட செடிகளை தேர்வு செய்வதே நல்லது.

வீட்டு மாடியில் அமைக்கப்படும் காய்கறி தோட்டத்தில் அனைத்து வகையான காய்கறி பயிர்களையும் நடவு செய்யலாம். பழ பயிர்களை வாழையும் நடவு செய்ய முடியும். காற்று வீசும் காலங்களில் வாழையின் வளர்ச்சிக்கேற்ப ஊன்றுகோல் கொடுத்து பாதுகாக்க வேண்டும். அலங்காரச் செடிகள், மூலிகைச் செடிகளையும் நடவு செய்து பராமரிக்க முடியும்.

தோட்டம் அமைப்பது...

மாடியில் தோட்டம் அமைக்கும் போது கூரைகளில் தளம், தொடர்ந்து வரும் ஈரத்தினால் பாதிப்படையாமல் இருக்க டேம் ரூப் பெயிண்ட்டிங் என்ற ஒரு வகையான பெயிண்ட் அடித்த பின்பு தோட்டம் அமைக்கலாம். மாடிப்பகுதியில் தொட்டி போன்ற அமைப்பை கூரையின் கான்கிரீட் பகுதியில் உருவாக்கி அதனுள் மண் கலவையை நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்பும் போது தண்ணீர் கூரையின் உட்பகுதியில் புகாதவாறு நீர் தடுப்பான் (வாட்டர் புரூப்) மூலம் பாதுகாக்க வேண்டும்.

மேலும் சிமெண்டு தொட்டிகள், பிளாஸ்டிக் பீப்பாய்கள், மர பீப்பாய்கள், மண் தொட்டிகள், பலவிதமான அளவுகளில் உள்ள டிரம்கள் போன்ற கொள்கலன்களிலும் செடிகளை வளர்க்கலாம். கொள்கலனை சுத்தமாக கழுவிய பின் அடிப்பகுதியில் வடிகாலுக்கான துவாரம் அமைக்க வேண்டும்.

தொட்டிகளிலும் மற்ற கொள்கலன்களிலும் செடிகளை வளர்க்கும்போது கவனமாக இருக்க வேண்டும். செடிகளுக்கு நீர் ஊற்றும் போது, மண்ணில் உள்ள ஈரப்பதம், வெப்பம், பயிர் வகை, பயிர்களின் நிலை, கொள்கலன்களின் அளவு போன்றவற்றை கருத்தில் கொண்டு போதுமான அளவு நீர் ஊற்ற வேண்டும். கோடைக் காலங்களில் அதிகளவு நீர் தேவைப்படும். ஒரு நாளைக்கு இரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். அதற்காக அதிக அளவு தண்ணீர் பாய்ச்சுவதும் தவறாகி விடும். எனவே மேற்பரப்பு மண்ணை ஒரு அங்குலம் அளவு தோண்டிப் பார்த்து, ஈரம் இல்லை என்றால் மட்டுமே நீர் விட வேண்டும். மண்ணின் கீழ்பரப்பில் தேவையான அளவு ஈரம் இருந்த போதும், ஆவியாதல் காரணமாக மேற்பரப்பு உலர்ந்து விடும். எனவே மேற்கண்ட முறையை கடைப்பிடிப்பது அவசியமாகிறது.

களை எடுத்தல்

கலப்பு உரங்களை மேலுரமாக இடுவதன் மூலம் செடிகளின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கலாம். டை– அமோனியம் பாஸ்பேட், யூரியா அல்லது அமோனியம் சல்பேட் போன்றவைகளை சிறிய அளவில் இடலாம். அதிக அளவிலான உரமும் செடிகளுக்கு தீங்கை விளைவிக்கும். உரமிட்ட உடனேயே நீர் பாய்ச்சுவது மிகவும் முக்கியம். இயற்கை உரங்களான மண் புழு உரம், மக்கிய தென்னை நாற்கழிவு மற்றும் இலை மக்குகளை செடிகளுக்கு இட வேண்டும்.

களை எடுக்கும் போது கைக்களையே மிகவும் சிறந்தது. இதன் மூலமே வேர்களுக்கு நல்ல காற்றோட்ட வசதி கிடைக்கும். கீரை வகைகளான தண்டுக் கீரை, வெந்தயக் கீரை, கொத்தமல்லி போன்றவற்றில் களை எடுக்கும் போது மிகவும் கவனமாக, வேர்களை பாதிக்காத வகையில் களை எடுக்க வேண்டும். மார்க்கெட்டுகளில் அரிதாக கிடைக்கும் வெந்தயம், லீக், சோயா போன்றவற்றை தொட்டிகளில் வளர்த்து பயனடையலாம். கறிவேப்பிலை, நெல்லிக்காய் போன்றவற்றையும் பெரிய அளவிலான கொள்கலன்களில் வளர்க்க முடியும்.

அலங்கார செடிகள்

இவ்வகை செடிகளை வளர்க்கும் போது கொள்கலன்களில் மண்ணுடன் சம அளவு மக்கிய மாட்டு எருவை கலந்து நிரப்பி, குளிர்ந்த நீரை பாய்ச்ச வேண்டும். தண்டுகள், விதைகள் அல்லது பதியங்கள் மூலம் தான் பெரும்பாலும் செடிகள் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றினை நட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். செடிகள் படர்ந்து வளர்வதற்கு பற்றுக்கோல் மற்றும் இதர சூழ்நிலையை நெடிகள் நட்டவுடன் அமைத்து விட வேண்டும். வளர்ந்து வரும் செடி, கொடிகளை அவ்வப்போது வெட்டி வளர்த்தால் செடிகள் நன்றாக வளரும். காய்ந்த கொடிகளையும் காய்ந்த இலைகளையும் நீக்கி வந்தால் செடிகள் அழகாக காட்சியளிக்கும்.

இன்றைய இயந்திர வாழ்க்கையில் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகின்றன. வீடுகளிலேயே தோட்டம் அமைத்து பராமரிப்பது போன்ற இந்த வேலைகளை செய்வது பயனுள்ள பொழுது போக்கு அம்சமாக இருக்கும். இயந்திர வாழ்வில் இருந்து சிறு மாறுதலும் கிடைக்கும். மேலும் இயற்கையான சூழ்நிலைக்கும் இவ்வகை தோட்டங்கள் வழிவகுக்கும். காலையிலேயே தோட்ட பராமரிப்பு வேலையில் ஈடுபடும்போது, உடலும் மனமும் புத்துணர்ச்சியும் இருக்கும்.





No comments