இயற்கை+5 நிமிடம்=மனநலம்; இது என்ன கணக்கு?!
இயற்கை+5 நிமிடம்=மனநலம்; இது என்ன கணக்கு?!
எங்கே நிம்மதி…. எங்கே நிம்மதி….என்று தேடிப்பார்த்தேன்
அது எங்கேயும் இல்லே……?!
பல சமயங்கள்ல, நெறைய
பேருக்கு பிடிச்ச பாட்டு அனேகமா மேலே குறிப்பிட்டிருக்கிற பாட்டாகத்தான்
இருக்கும்னு நெனக்கிறேன். அப்படி இருந்தா அதுல ஆச்சரியப்படுறதுக்கு ஒன்னும்
பெருசா இல்ல! அப்படி இல்லைன்னாதான் கொஞ்சம் ஆச்சரியப்படனும்!!
ஏன் சொல்றேன்னா, ஒரு பக்கம் அலுவலக
வேலைப்பளு, எதிர்கால வாழ்க்கைக்கான திட்டமிடல் மறுபக்கம் குடும்பநலன்,
முன்னேற்றம் குறித்த பொறுப்புகள்னு மும்முரமாகிப்போகும் ஒரு சராசரி மனிதனோட
வாழ்க்கையில நிம்மதி இல்லாமப்போக வாய்ப்புகள் அதிகம்தான்!
அதுமட்டுமில்லாம, இழந்துபோன நிம்மதிய சரிகட்ட கொஞ்சம்
ஆசுவாசப்படுத்திக்கலாமேன்னு சினிமா, ஊடகம், ஃபேஸ்புக், ட்விட்டர்,
வலையுலகம்னு இணையதளங்களுக்குள்ளே போனா பத்தும் பத்தாததுக்கு ஏதோ ஒரு வகையில
இந்த ஊடகங்களும் நிம்மதியை குலைத்துவிடுகின்றன!
இதுல குறிப்பிட்டுச் சொல்லனும்னா, நம்ம
சினிமாவுலகத்துல சமீபகாலமா வர்ற பல திரைப்படங்களும், குப்பை மாதிரியான
கதைக்கருவை எடுத்துக்கிட்டு, குப்பத்துக்கு ராஜா மாதிரி ஒரு
கதாப்பாத்திரத்துல, சாத்தியமே இல்லாத ஒரே ஆளா நூறு பேர பறந்து பறந்து
அடிக்கிற சண்டைக் காட்சிகளையும், ரெட்டை ஜடை-குட்டைப்பாவாடையில்
தொப்புளைக் காட்டி வரும் ஒரு கதாநாயகியுடன், வெளி நாட்டு தெருவோரங்கள்ல
குத்து டான்ஸ் ஆடுற ‘ஹீரோயிச’ கதாநாயகர்களையும் (?)
பார்த்தோமுன்னு வைங்க நிம்மதி மட்டுமில்ல, மூளையே கூட குழம்பிப்போகறதுக்கான
வாய்ப்புகள் இருக்கு, ஜாக்கிரதையா இருங்க!
மூளைன்ன உடனே இனி இந்தப் பதிவுல நான்
என்னத்தப் பத்தி சொல்லப் போறேன்னு ஓரளவுக்காவது யூகிச்சிருப்பீங்க. மிதிய
நானே சொல்லிடுறேன். நாம இழக்கிற நிம்மதியும், ஒருவித மனஉளைச்சலும் நம்ம
மூளையை/மனதை பாதிக்கிறதுங்கிறதுனால, நம்ம மனநலம் ரொம்பவும்
பாதிக்கப்படுகிறது! அப்படி பாதிக்கப்படுற மனநலனை கண்டுக்காம விட்டுட்டா,
நாளைக்கு அதுவே ஒரு பெரிய மனநோய் ஏற்படக் காரணமாயிடும்னு எச்சரிக்கிறாங்க
விஞ்ஞானிங்க!
பல்வேறு பிரச்சினைகளால்
பாதிப்புக்குள்ளாகும் மனநலனை பாதுகாக்க ஒரு புது கணக்கை
கண்டுபிடிச்சிருக்காங்க விஞ்ஞானிங்க. அந்தக் கணக்கைப் பத்தித்தான் நாம
இந்தப் பதிவுல விரிவா பார்க்கப்போறோம். வாங்க போலாம்…..
இயற்கையும் மனிதனும்!
மனிதனோட
வளமான வாழ்க்கையில இயற்கையின் பங்கு பல்வேறு வழிகள்ல எப்போதும் இருக்கவே
செய்கிறது. முக்கியமாக, மனிதனின் மனநலம்/மூளையின் சீரான செயல்பாட்டுக்கு,
இயற்கையுடன் இரண்டறக் கலந்த ஒரு வாழ்க்கை முறை அவசியம்னு நமக்குத்
தெரியும். இக்கருத்தை இதுவரையிலான பல ஆய்வுகளும் வலியுறுத்தியிருக்கின்றன!
ஆனா இப்போ இருக்குற காலகட்டத்துல, மனிதன்
இயற்கையுடன் செலவிடும் நேரம் மிக மிக குறைவு. காரணம் என்னன்னா,
இயந்திரத்தனமாகிப் போன வாழ்க்கை. அலுவலகம், வாகனப்பயணம், சுற்றுச்சூழல்
மாசுபடுதல் இப்படி எத்தனையோ பிரச்சினைகள்னால, மனிதனுக்கும் இயற்கைக்குமான
நெருக்கம் மெல்ல மெல்ல குறைந்துகொண்டே வருகிறது! இம்மாதிரியான வாழ்க்கை
முறையில, சீரான மனநலனுடன் வாழ, மனிதன் ஒரு நாளில், எவ்வளவு நேரம்
இயற்கையுடன் செலவிட வேண்டும்னு இதுவரைக்கும் எந்த ஆய்வும் சொல்லவில்லை!
இயற்கையுடன் ஒரு 5 நிமிடம் மேம்படும் உங்கள் மனநலம்!- காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடாத குறையாக உழைக்கும் ஒரு மனிதனால், எவ்வளவு நேரம் இயற்கையுடன் செலவிட முடியும்?
- சீரான மனநலனுடன் கூடிய ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, ஒரு மனிதன் எவ்வளவு நேரம் இயற்கையுடன் செலவிட வேண்டும் என்று விஞ்ஞானம் வலியுறுத்துகிறது?
இந்த ரெண்டு கேள்விக்குமே ஒரு பதில்,
அதுவும் நமக்கு ஏதுவான ஒரு பதிலா இருந்தா எப்படி இருக்கும்?! சூப்பரா
இருக்கும் இல்லீங்களா? கவலைப்படாதீங்க, அந்த ரெண்டு கேள்விக்குமே ஒரே
பதில்தான்! அது….
“5 நிமிடங்கள்”
அட என்னங்க அப்படிப் பார்க்குறீங்க?!
உண்மைதாங்க. அதாவது, இங்கிலாந்து நாட்டின் சமீபத்திய ஒரு ஆய்வில், 10
வெவ்வேறு ஆய்வுகளில், சுமார் 1,252 பேரின் நடைப்பயிற்ச்சி, தோட்டவேலை,
மிதிவண்டி ஓட்டுதல், மீன் பிடித்தல், படகு ஓட்டுதல், குதிரை சவாரி மற்றும்
விவசாயம் போன்ற பல்வேறு தினசரி வேலைகளைக் கணக்கிட்டு, உருவாக்கப்பட்ட
புள்ளிவிவரங்களைக் கொண்டு, ஒருவரின் மனநலனுக்கு (self-esteem) தேவையான கால அளவு என்ன என்று சோதனை செய்து/கணக்கிட்டு பார்த்ததில்…..
சராசரியாக, ஒருவர் 5 நிமிடங்கள் இயற்கையுடன் இணைந்து செய்யும் செயல்/வேலையிலேயே சீரான மனநலனை பெற்றுவிடுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது?!
இதுவரையிலான உலக மனநல ஆய்வுக் கோப்புகளில், முதல்முறையாக கால அளவு-மனநலம்
இரண்டுக்குமான தொடர்பினை நேரடியாக, இவ்வாய்வின் மூலம்
கண்டுபிடித்துள்ளோம் என்கிறார் இங்கிலாந்தின் எச்செக்ஸ் பல்கலைக்கழக
விஞ்ஞானி ஜூல்ஸ் ப்ரெட்டி (University of Essex researcher Jules Pretty)
இந்தப் புதிய ஆய்வின் மூலம், ஒரு மனிதனின்
சராசரி வாழ்க்கையில், ஒரு நாளில் குறைந்தது 5 நிமிடங்கள், நகரிலுள்ள ஒரு
பூங்காவில், தங்கள் வீட்டு தோட்டத்தில், தண்ணீருள்ள ஒரு பசுமையான இடத்தில்
என ஏதோ ஒரு இடத்தில், விளையாடி/நடந்து, உட்கார்ந்து அளவளாவி இப்படி ஏதாவது
ஒரி விதத்தில் கழித்தாலே சீரான ஒரு மன நிலையை/மனநலனை ஒரு மனிதன் எளிதில்
பெற்றுவிட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது!
இதைப்படிக்கிற உங்களில் சிலர்,
இயற்கையுடனான வெறும் 5 நிமிடங்களே சீரான மனநலனுடன்கூடிய ஒரு வாழ்க்கை
அமைத்துக்கொடுக்குமென்றால், 5 நிமிடங்களென்ன அரை மணி நேரம்கூட செலவிட நான்
தயார் அப்படீன்னு சொல்லுவீங்கன்னா, தாராளமா செய்யுங்க அப்படீங்கிறாரு
விஞ்ஞானி ப்ரெட்டி! ஏன்னா, அது நம் மனநலனை இன்னும் பல மடங்கு மேம்படச்
செய்கிறது என்பதால்!
No comments