Just relax

Just relax
Just Relax__keep deep breath..

ஜென் கதைகள்--விடை உன் கையில்!

விடை உன் கையில்!

ஒரு இளைஞன் ஒரு சிறிய பறவையைப் பிடித்துத் தன் உள்ளங்கைக்குள் வைத்துக் கொண்டு ஜென் மாஸ்டரிடம் வந்தான்.
"மாஸ்டர்! என் கையில் உள்ள பறவை உயிருடன் இருக்கிறதா, அல்லது இறந்து விட்டதா? நீங்கள்தான் அனைத்தும் அறிந்தவர் ஆயிற்றே, பதில் கூறுங்கள்" என்றான்.

பறவை உயிருடன் இருக்கிறது என்று மாஸ்டர் கூறினால் அதை உள்ளங்கையில் அமுக்கிக் கொன்று விடலாம். அவர் இறந்து விட்டது என்று சொன்னால், "நீங்கள் சொல்வது தவறு! இதோ உயிருடன் இருக்கிறது" என்று காண்பிக்கலாம் என்பது அவன் திட்டம். எல்லாம் உணர்ந்த மாஸ்டருக்கா இது தெரியாது?

அவர் மிருதுவான குரலில், "விடை உன் கையில் இருக்கிறது" என்றார்!

நீருடன் என்னைப் பொருந்தச் செய்து கொண்டேன்!

ஒரு வயதான மனிதன் வேகமாகப் பாய்ந்தோடும் வெள்ள நீரில் விழுந்து விட்டான். அந்த வெள்ளம் அருவி ஒன்றை நோக்கிப் பாய்ந்து சென்றது. இதைப் பார்த்த அனைவரும் அலறினர். அவர் பிழைப்பது துர்லபம் என்றே அனைவரும் நினைத்தார்கள். ஆனால், ஒரு பெரும் அற்புதம் போல அவர் உயிர் பிழைத்து அருவியின் அடியிலிருந்து வந்தார். அவரைச் சூழ்ந்து கொண்ட அனைவரும், "எப்படித் தப்பினீர்கள்?" என்று ஆச்சரியத்துடன் வினவினர்.

அதற்கு அவர், "நான் நீருடன் என்னைப் பொருந்தச் செய்து கொண்டேன். நீரை எனக்குப் பொருந்தும்படி ஆக்கிக் கொள்ள முயலவில்லை. சற்றுக் கூட யோசிக்காமல் நீரை என்னை உரிய முறையில் உருவாக்கம் செய்யும்படி விட்டு விட்டேன். சுழலுள் சிக்கிய நான், சுழலிடமிருந்தே வெளிவந்தேன். இதுதான் நான் பிழைத்த கதை" என்றார்.

முழு விழிப்புணர்ச்சி!

பத்து வருடகாலக் கடினப் பயிற்சிக்குப் பின்னர் டெனோ ஒரு ஜென் குருவாக ஆனார். புகழ்பெற்ற மாஸ்டரான நான்–இன்-ஐப் பார்க்க அவர் சென்றார். நான் இன், சீடரான டெனோவை வரவேற்றார். பிறகு கேட்டார்: "டெனோ! உன்னுடைய கட்டை மிதியடியையும் குடையையும் மடாலய வாசலில் விட்டு வந்தாயா?"

"ஆமாம்! குருவே" என்றார் டெனோ.

"டெனோ! உனது குடையை மிதியடியின் இடது பக்கம் வைத்தாயா அல்லது வலது பக்கம் வைத்தாயா? சொல்லேன்!" என்று கேட்டார் மாஸ்டர்.

டெனோவுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. தனக்கு இன்னும் முழுமையான விழிப்புணர்ச்சி வரவில்லை என்பதை அவர் உணர்ந்து கொண்டார். ஆகவே, திருப்பியும் பயிற்சிக்குத் தயாரானார்.

நான்–இன் கீழ் இன்னொரு பத்து ஆண்டுக் காலம் பயிற்சியை மேற்கொண்டார் டெனோ!

நீ நான் இல்லையே!

சுவாங் ட்சு என்ற பெரிய ஜென் மாஸ்டருடன் அவரது நண்பர் ஒருவர் ஆற்றின் கரையோரமாகச் சென்று கொண்டிருந்தார். நண்பரை நோக்கிய சுவாங் ட்சு, "ஆற்றில் நீந்திக் கொண்டிருக்கும் மீன்களைப் பார்! அவை எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றன பார்!" என்றார்.

"நீங்கள் மீன் இல்லையே! ஆகவே, அவை சந்தோஷமாக இருக்கின்றன என்பதை நிஜமாக நீங்கள் அறிய முடியாதே!" என்றார் நண்பர். சுவாங் ட்சு நண்பரை நோக்கிக் கூறினார்: "நீ நான் இல்லையே! ஆகவே, மீன்கள் சந்தோஷமாக இருக்கின்றன என்பதை நான் அறிந்திருக்கவில்லை என்பதை நீ எப்படி அறிவாய்?"

என்னை மணி என்று எண்ணிக் கொள்!

புதிதாகப் பயிற்சி பெற வந்த சீடன் ஒருவன் ஜென் மாஸ்டரை அணுகி, "பயிற்சிக்கு எப்படித் தயார் ஆவது?" என்று கேட்டான். அதற்கு ஜென் மாஸ்டர், "என்னை ஒரு மணி போல எண்ணிக் கொள்! என்னை சிறிதாக ஒரு தட்டுத் தட்டு. நான் டிங் என்று மெதுவாக ஓசை செய்வேன். பெரிதாக ஒரு அடி அடி! நான் டாங்ங்… என்று பலத்த ஓசையை எழுப்புவேன்" என்றார்.

இரண்டு முயல்களைத் துரத்துபவன் ஒன்றையும் பிடிக்க முடியாது!

தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்ள விரும்பிய ஒருவன் மாஸ்டரிடம் வந்து, "தற்காப்புக் கலை பற்றிய எனது அறிவை விருத்தி செய்து கொள்ள விரும்புகிறேன்! உங்களிடம் ஒரு ஸ்டைலைக் கற்றுக் கொள்வது போல இன்னொரு மாஸ்டரிடம் சென்று இன்னொரு ஸ்டைலைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்! எனது இந்த அபிப்ராயம் சரிதானே?" என்று கேட்டான்.

மாஸ்டர் பதில் கூறினார்: "இரண்டு முயல்களைத் துரத்தும் ஒருவன் ஒன்றையும் பிடிக்க முடியாது!"

சின்ன உண்மை

ஜென் பொன்மொழி:-

நீ இருக்கும் இடத்திலேயே உண்மையை உன்னால் அறிய முடியவில்லை எனில், வேறு எங்குதான் அதை உன்னால் கண்டுபிடிக்க முடியும்? (If you are unable to find the truth right where you are, where else do you expect to find it? – Dogen.)

--மின்னும்

No comments