Just relax

Just relax
Just Relax__keep deep breath..

Best Posts

‘அப்படியா!’ – ஜென் கதைகள்

‘அப்படியா!’ – ஜென் கதைகள்
ரு ஊரில் ஒரு ஜென் குரு இருந்தார். நல்ல குரு என்பதை விட, நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்பது அவர் கொள்கை. அப்பழுக்கில்லாதவர் என்ற பெயரை அந்த ஊர் மக்களிடம் பெற்றிருந்தார் குரு.
அவர் இருந்த குடிலுக்குப் பக்கத்தில் ஒரு அழகான இளம்பெண்ணும் அவளது பெற்றோரும் வசித்துவந்தனர். அவர்கள் அந்த ஊரில் ஒரு உணவகத்தை நடத்தி வந்தார்கள்.
இளம்பெண் அடிக்கடி குருவைப் பார்ப்பது வழக்கம்.
ஒரு நாள் அந்த இளம்பெண் கர்ப்பமாக இருந்ததை பெற்றோர் கண்டுபிடித்து அதிர்ந்தனர்! கோபத்துடன் யார் இதற்கு காரணம் என்று மகளிடம் கேட்டனர்.
அவளோ ஒன்றும் சொல்வதாக இல்லை. பலவாறாக முயற்சித்த பின்னர், அவர் வாயைத் திறந்தாள். குருவின் பெயரைச் சொன்னாள். இப்போது பெற்றோருக்கு மேலும் அதிர்ச்சி!
அடக்க முடியாத ஆத்திரத்துடன் குருவின் குடிலை நோக்கி ஓடினர். அவரைப் பார்த்து விஷயத்தைச் சொல்லி, ‘நீயெல்லாம் ஒரு மனிதனா… இப்படிப் பண்ணிவிட்டாயே’ என்றனர்.
குரு அமைதியாகப் பார்த்தபடி, ‘அப்படியா?’ என்று கேட்டுவிட்டு உள்ளே போய்விட்டார்.
அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியவில்லை பெற்றோருக்கு.
அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. குழந்தையைத் தூக்கிக் கொண்டு குருவிடம் வந்தனர் பெற்றோர். இப்போது அந்த ஊருக்கே நீதி சொல்லும் ஸ்தானத்தில் இருந்தார் குரு.
வந்த பெற்றோர், ‘இதோ உன் குழந்தை. இனி எங்களால் பார்த்துக் கொள்ள முடியாது. உன் குழந்தையை நீயே வைத்துக் கொள்,’ என்று கூறினர்.
இப்போதும் குருவின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தை… ‘அப்படியா!’
ஆனாலும் அந்தக் குழந்தையை ஏற்றுக் கொண்டார்.
ஆண்டொன்று கழிந்தது…
குழந்தையைப் பிரிந்து அந்தப் பெண்ணால் இருக்க முடியவில்லை. பெற்றோரிடம் போனாள்.
“என்னை மன்னித்து விடுங்கள். என் குழந்தையின் தகப்பன் அந்த குருதான் என்று பொய் சொல்லிவிட்டேன். உண்மையில், மீன் கடையில் வேலைபார்க்கும் ஒரு இளைஞன்தான் இதற்கு காரணம்…”, என்று கூறி, குழந்தையை தன்னிடம் சேர்க்கச் சொன்னாள்.
மீண்டும் அந்த குருவிடம் ஓடினார்கள் பெற்றோர்.
“அய்யா.. குருவே… எங்களை மன்னித்துவிடுங்கள். அறிவிழந்து, நிதானமிழந்து, உங்கள் பெருமை அறியாமல் நாங்கள் எத்தனை பெரிய தவறைச் செய்துவிட்டோம். எங்களை மன்னித்து, குழந்தையை ஒப்படையுங்கள்,” என்று கதறினர்.
குருவின் முகத்தில் அதே மாறாத புன்னகை. இப்போதும் அவர் உச்சரித்த வார்த்தை…
‘அப்படியா!!’

No comments